நாட்டின் தற்போதைய 17-வது மக்களவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2024) மே மாதம் முடிகிறது.
ஆனால் மக்களவைத் தேர்தலை மத்தியில் ஆளும் பாஜக அரசு டிசம்பர் மாதத்திலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறி வந்தார். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் மக்களவை தேர்தலை டிசம்பரில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுக்கு ஒரு திசையில் சிதறிக்கிடந்தன. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் ஒன்று சேர்ப்பதற்கான பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு அவை நிறைவேறாமல் இருந்தன. இதனால் மக்களவை தேர்தல் எப்போது நடந்தாலும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்பதுதான் நிலைமையாக இருந்தது.
ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்முயற்சியில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஒருங்கிணைத்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இதன் கூட்டங்கள் பாட்னா, பெங்களூரில் நடைபெற்று தற்போது மும்பையில் நடைபெறுகிறது.
இம்முறை பல்வேறு கருத்து வேறுபாடுகள், மாநிலங்களில் கடும் எதிரிகளாக களத்தில் நிற்பவர்கள் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக “இந்தியா” கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்து நிற்கின்றன.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காத்து வந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து வாயை திறக்க வைத்தது “இந்தியா” கூட்டணி.
முன்னர் 16 கட்சிகள் இருந்த நிலைமை மாறி 26 என உயர்ந்து தற்போது 28 என அதிகரித்துள்ளது. “இந்தியா” கூட்டணி வலிமையடைந்து வருவதாலும் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறுவதாலும் திடீரென சிலிண்டர் விலையை மத்திய பாஜக அரசு குறைத்தது.
அத்துடன் “இந்தியா” கூட்டணியின் கூட்டம் நடைபெறும் போது பாஜகவும் தமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறது. இவை அனைத்துமே மத்தியில் ஆளும் பாஜகவுக்கு “இந்தியா” கூட்டணி ஒருவிதமான நெருக்கடியை கொடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2019-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடந்தன. அந்த எதிர்க்கட்சிகள் இப்போது ஒன்று சேர்ந்துள்ளன. ஒரு கணக்குக்காக, 2019-ல் பாஜக பெற்ற வாக்குகளையும் இப்போது சேர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகளையும் ஒப்பிட்டால் “இந்தியா” கூட்டணி கட்சிகள் சுமார் 1 கோடி வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளன.
அதாவது “இந்தியா” கூட்டணி தொடர்ந்து வலிமை பெறுவது என்பது மக்களவைத் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு மிகக் கடுமையான ஒரு நெருக்கடியை உருவாக்கும் என்பதுதான் கள யதார்த்தம்.
“இந்தியா” கூட்டணியின் இந்த விஸ்வரூபத்துக்கு செக் வைக்க ஒரே வழி மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதாகத்தான் இருக்கும் என கருதலாம் பாஜக.
இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22 வரை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டமானது 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தை முற்று முழுதாக தேர்தல் ஆயத்தப் பணிகளுக்கு பாஜக அரசு பயன்படுத்தவே வாய்ப்பிருக்கிறது. அதாவது மக்களுக்கான பல புதிய திட்டங்கள், சலுகைகள், விலை குறைப்பு அறிவிப்புகள் ஏராளமாக முன்வைக்கப்படலாம்.
ஆம், மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் வகையில்தான் இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரே கூட்டப்படுகிறது என்பதே உண்மை.
பாஜகவின் ராஜதந்திரம் பலிக்குமா? “இந்தியா” கூட்டணியின் பதிலடி எப்படி இருக்கும்? தேர்தல் வாண வேடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்!