தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள்- ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர்.- அவர் பதவியேற்ற நாள்முதல் இன்றுவரை – அரசமைப்புச் சட்டப்படி தாம் ஏற்ற பதவிப் பிரமாணத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார் என்பது பல்வேறு கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் முன்வைத்து வரும் குற்றச்சாட்டு.
தமிழ்நாடு அரசின் எதிர்க்கட்சித் தலைவராகவே தம்மை பாவித்து, முற்றிலும் விரும்பத்தகாத வகையில், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியான மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகக் கொண்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போட்டி அரசு ஒன்றினை தனது ராஜ்பவன் நடவடிக்கைகள் மூலம் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் நடத்தி வருகிறார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு பேரறிவாளன் வழக்கில் இவரது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பகிரங்கமாகவே தனது கண் டனத்தைத் தெரிவித்தது. ‘‘மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்; தனித்த கண்ணோட் டத்துடன் செயல்பட முடியாது’’ எனத் தெளிவாகக் குறிப்பிட்டது.
அதற்குப் பிறகு ‘‘ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் ஓர் அங்கம் என்பதை அரசமைப்புச் சட்டம் 163(1) கூறு தெளிவுபடுத்து கிறது; அதன்படிதான் அவர்கள் கடமையாற்ற முடியும்‘’ என்றும் மேலும் சில வழக்குகளில் அண்மையில் இவ்வாறான பல தீர்ப்புகள் வெளிவந்துள்ளன.
தற்போது ஒரு செய்தி…- ராஜ் பவனிலிருந்து வந்துள்ளது. 5 லட்சம்-, பாராட்டு சான்றிதழ் – ‘‘சமூக சேவகர்களுக்கான கவர்னர் விருது’’ – விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி கடைசி நாள்.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பல விருதுகளை தக்கவர்களை அடையாளம் கண்டு கொடுத்து வருகிறது – பல ஆண்டுகளாக. அதற்குப் ‘போட்டி’யாகவோ அல்லது தனக்குத் தனி விளம்பரம் தேடவோ இப்படி ஒரு முயற்சியா? தமிழ்நாட்டில் நடப்பது கவர்னர் ஆட்சியா? புரியவில்லை. இது அனுமதிக்கத்தக்கதா?
தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்துதானே இவருடைய ஊதியம் – மற்றச் செலவுகள் அரசமைப்புச் சட்டப்படி. வழங்கப்படுகின்றன. நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சமும், தனி நபர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்குவாராம். இந்த அறிவிப்பு தேவையா?
தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசு நடத்துகிறார் என்பதைத் தானே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டு மக்களின் பொறுமையை மேலும் மேலும் சோதனை செய்கிறாரா ஆளுநர் என்றே கேட்கத் தோன்றுகிறது. அவருக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என தமிழ்நாட்டுத் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனரே. இது ஆளுநர் காதில் விழ வில்லையா?
வன்மையான கண்டனத்திற்குரிய ஆளுநரின் இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத பேச்சு, செயல் மூலம் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டு மக்களை பொங்கி எழுச் செய்து விடுவோரோ, ஆளுநர்?