fbpx
Homeதலையங்கம்ஆர்.என்.ரவி அவர்களே, இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல!

ஆர்.என்.ரவி அவர்களே, இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிப்பதற்காக தமிழ்நாடு அரசு வழங்கிய, அந்த 65வது அம்சமாக இடம் பெற்று இருந்த “சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியினை அரசு வழங்கி வருகின்றது” என இருந்த பத்தியை ஆளுநர் வாசிக்காமல் வேண்டும் என்றே தவிர்த்தார்.

ஆளுநரின் இந்த சட்டப்பேரவை மரபு மீறல் நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் ஆளுநரின் உரைக்குப் பிறகு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அது ஏகமனதாக நிறைவேறியது.

முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை முடிவதற்கு முன்பே அதுவும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து அவையை விட்டு வெளியே சென்றது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது இதுதான் உங்கள் தேசப்பற்றா? என தமிழ்நாட்டு மக்களும் கேள்வி எழுப்பி ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக எதிர்க்கட்சிகளே இது போன்று கொள்கை சார்ந்து வெளிநடப்பு செய்யும் நிலையில், சுதந்திரம் அடைந்து 70 வருட சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் ஒருவர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளதும் தேசிய கீதத்தை புறக்கணித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2023 புத்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் இப்படி அமையும் என்று, பாவம்… தமிழ்நாட்டு மக்கள் சத்தியமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சபையில் அரங்கேறிய களேபரங்களுக்கு முழுமுதற்காரணம் ஆளுநர் ஆர்.என்.ரவி தான் என்று சொன்னால், மனசாட்சி உள்ள யாரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒப்புகொள்ளதான் செய்வார்கள்.

அதாவது, ஆளுநர் உரைக்கான வரைவு, முன்கூட்டியே கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்படுவதன் நோக்கத்தையே சிதைத்துவிட்டதாக கண்டன குரல்கள் எழுந்துள்ளன. அவர் வகிக்கும் உயர் பதவிக்கு அழகா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ட்விட்டரில்GetOutRavi என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

ஆளுநர்ஆர்.என்.ரவி பதவி விலகலே மரியாதையாகும்!

படிக்க வேண்டும்

spot_img