கடந்த ஏப்ரல் மாதத்தில் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிவந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.
இவர் மீதான வழக்கு தற்சமயம் தமிழ்நாட்டில் நடந்துவருகிறது. இதற்கிடையே தனது மீதான தேசியப் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி யூடியூபர் மணீஷ் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதனை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பொது அமைதியைச் சீர் குலைக்கும் வகையில் எதையும் பதிவிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.
அதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேட்டிக்கு மாறான ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறது. தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் ஓங்கிய குரலில் முழங்கி உள்ளது. அந்தக் கருத்து இப்போது திமுகவின் நிலைப்பாட்டுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில பத்திரிகைக்கு அளித்த தகவல்கள் பொய்யானவை என்று சொல்லி பக்கம் பக்கமாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசும் பொன்முடியும் விளக்குகிறார்கள்.
என்னிடம் ஒரு மசோதா கூட நிலுவையில் இல்லை என ஆளுநர் சொல்லி இருக்கிறார். அதற்கு அமைச்சர்கள் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என ஆதாரத்துடன் பதிலளித்திருக்கிறார்கள். அதன்பிறகு ஏன் ஆளுநர் விளக்கம் அளிக்கவில்லை? அவர்தானே விளக்கம் தரவேண்டும்?
கல்வித்தரம் குறித்து இந்தியளவில் போடப்பட்ட பட்டியலில் 100 இடத்திற்கும் கீழாகச் சென்றுவிட்டது தமிழ்நாடு என்று ஆளுநர் பொய் சொல்கிறார். இந்திய அளவில் ஒட்டுமொத்த சிறந்த 100 கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 18 இடங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது.
நமது மாநிலக் கல்லூரி 3வது இடத்தில் இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் சொல்கிறார். ஆனால், ஆளுநர் எந்த ஆதாரமும் இல்லாமல் போகின்ற போக்கில் பேசி இருக்கிறார். ஒருவேளை உயர்கல்வி அமைச்சரின் தகவல் தவறு என்றால் உடனடியாக ஆளுநர் மறுத்திருக்க வேண்டாமா? ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்.
அப்படி என்றால் ஆளுநர் என்கிற மாண்பையே குறைக்கின்ற விதத்தில் ஆர்.என்.ரவி நடந்துகொள்கிறார் என்பது தானே அர்த்தம்?
உச்சநீதிமன்றம் மறைமுகமாக ஆளுநரின் மண்டையில் மீண்டும் ஒரு கொட்டு கொட்டி இருக்கிறது.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படப் போவதில்லை. முன்பே ஒருமுறை ஆளுநர் என்பவர் அவருடைய வேலையை மட்டும் பார்க்கவேண்டும். எந்த மாநிலத்திற்கு அவர் நிர்வாகியாக உள்ளாரோ அந்த மாநிலத்திற்கு எதிராகப் பொதுவெளியில் பேசக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அதன்பிறகுதான் அதிகம் பேசுகிறார்கள்.
தவறான தகவலைத் தரும் ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாதா? என்ற கேள்விக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் அரசியல் விமர்சகருமான பாலச்சந்திரன் ஒரு பேட்டியின்போது, ஆளுநர் என்ற முறையில் செய்கின்ற காரியங்களை எதிர்த்துத்தான் வழக்கு தொடர முடியாதே ஒழிய, அவர் மீது வேறு காரணங்களுக்காக வழக்குத் தொடர முடியும்.
இவர் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார். அதை அவர் ஆளுநராக இருந்து சொல்லவில்லை. ஆளுநர் என்ற முறையில் சொல்ல அவருக்கு சட்டப்படி 3 வழிகள் உள்ளன. முதலமைச்சரை அழைத்துச் சொல்லலாம். இது முதல் வழி. அல்லது எழுத்துப்பூர்வமாகக் கடிதம் எழுதலாம். இது 2வது வழி. அல்லது குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பலாம்.
அது 3வது வழி. ஒவ்வொரு ஆளுநரும் மாதம் ஒருமுறை தனது மாநிலத்தின் நிர்வாகத்தைப் பற்றி குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பவேண்டும். அதை விட்டுவிட்டு தத்துப் பித்து என பொதுவெளியில் பேசக்கூடாது என இடித்துரைத்திருக்கிறார்.
இனியாவது பொய்யுரைகளைப் பரப்பிடும் பொறுப்பற்ற வேலைகளில் ஆளுநர் ஈடுபடக் கூடாது. பொய்களைப் பரப்பி, ஒரு மாநிலத்தின் கவுரவத்தைக் குலைக்கின்ற வேலையைச் செய்வதற்கு ஆளுநர் தேவையா?
இது தான் தமிழ்நாட்டு மக்களின் ஒரே கேள்வி!



