முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் ஈரோடு அனைத்து ஐவுளிப் பதனிடுவோர் சங்கத் தலைவர் ஏ.முருகேசன், செயலாளர் எஸ்.பழனிச்சாமி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.காந்திராஜன், பொருளாளர் பி.ஏ.மாதேஸ்வரன், செயலாளர் முருகசாமி, நாமக்கல் சாயமிடுவோர் சங்க செயலாளர் வி.கிருஷ்ணராஜ் ஆகியோர் சந்தித்தனர்.
சாய ஆலை பிரிவிற்கான மூலதன மானியம் 268 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தமைக்காக அப்போது நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம். கைத்தறி செயலர் வி.அமுதவல்லி, துணிநூல் துறை இயக்குநர் ஆர்.லலிதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு அனைத்து ஐவுளிப் பதனிடுவோர் சங்கத் தலைவர் ஏ.முருகேசன் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் புதிதாக ஜவுளி 17 ஆலை அமைக்க மூலதனம் மானியமாக 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 கோடி அரசு வழங்கும்.
ஏற்கனவே உள்ள ஆலைகள் விரிவாக்கம் செய்ய நவீனப்படுத்த உயர்ந்த பட்சமாக நான்கு கோடி மானியம் வழங்கப்படும். ஆலைகளை நேரில் வந்து பார்க்க அரசால் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவின் ஆய்வுக் கட்டணத்தில் கூட அரசால் 25 சதம் மானியமாக உயர்ந்த பட்சம் ரூ.15 லட்சம் வழங்கப்படும்.
ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடப்பாண்டே அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் இந்த நிதி முழுமையாக செலவிடப்படும்.
மேலும் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



