fbpx
Homeபிற செய்திகள்ஓட்டு திருட்டு - விசாரணையை முன்னெடுக்குமா தேர்தல் ஆணையம்?

ஓட்டு திருட்டு – விசாரணையை முன்னெடுக்குமா தேர்தல் ஆணையம்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது மீண்டும் ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல்காந்தி, இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் “வாக்கு திருடர்களை” பாதுகாப்பதாகவும், ஜனநாயகத்தைக் கொல்பவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை நிரூபிக்க சில ஆதாரங்களையும் முன்வைத்தார். அவர் பேசுகையில், “இந்தியாவில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள், பல்வேறு தொகுதிகளில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய முறைகேடு” என்று கூறினார். தான் முன்னதாக அறிவித்த “ஹைட்ரஜன் குண்டு” போன்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளித்த தேர்தல் ஆணையம், அவை “தவறானவை மற்றும் ஆதாரமற்றவை” எனத் தெரிவித்தது. “எந்தவொரு தனிநபராலும் ஆன்லைனில் வாக்காளர் பெயரை நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபருக்கு வாய்ப்பு அளித்த பிறகே எந்தவொரு நீக்கமும் நடைபெறும்“ என்று விளக்கமளித்தது.

ராகுல் காந்தி கர்நாடகாவின் அலந்த் சட்டமன்றத் தொகுதியின் தரவுகளைப் பயன்படுத்தி தனது வாதத்தை முன்வைத்தார். அங்கு காங்கிரஸ் ஆதரவாளர்களின் வாக்குகள், தேர்தலுக்கு முன்னதாகவே திட்டமிட்டு நீக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக கர்நாடக காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறை நடத்திவரும் விசாரணையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தலைமை தேர்தல் ஆணையருக்கு யார் இந்தச் செயலைச் செய்கிறார்கள் என்பது தெரியும். இந்த ஆபரேஷன் எங்கு நடக்கிறது என்பதை அறிய கர்நாடக சி.ஐ.டி., 18 மாதங்களில் 18 கடிதங்களைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளது. ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.

‘‘அரசியல் சாசன அமைப்புகள் மீதான ராகுல் காந்தியின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், இந்திய ஜனநாயகத்தின் மீது அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது. ராகுல் காந்தி தனது புகார்களுக்கு வலிமை இருப்பதாக கருதினால் நீதிமன்றம் செல்லலாம். அவர் கூறிய தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு திருட்டு நடந்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருக்க முடியுமா?’’ என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

ஆக, ஜனநாயகத்தின் கொலையாளிகளை தேர்தல் ஆணையம் பாதுகாக்கிறது” என்பது தான் ராகுல்காந்தி பிரதான குற்றச்சாட்டு. எதிர்க்கட்சித் தலைவர் கூறும் குற்றச்சாட்டுகளை புறம்தள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை தேர்தல் ஆணையம் விசாரிப்பதே சிறந்த நடைமுறையாக இருக்கும் என்பது முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி சில நாட்களுக்கு முன் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்வைப்பது ஜனநாயக கடமை என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார். எனவே, இந்த குற்றச்சாட்டுகள் தொடர்கதை ஆகும் முன், தீவிர விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும்.

இந்த பிரச்னை சாதாரணமானதல்ல. இந்தியா முழுவதுக்குமான ஜனநாயக நீரோட்டத்திற்கு தடைக்கற்களாக ஓட்டு திருட்டு பார்க்கப்படுகிறது. இது உண்மை என்பது ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு. இல்லை என்பது தேர்தல் ஆணையத்தின் பதில். இதில் எது உண்மை என்பது வெளிவர வேண்டியது மிகமிக முக்கியம்.

தேர்தல் ஆணையத்தின் மீது கறை படிந்து விட்டது. அதனை முழுமையாகத் துடைத்தெறிய வேண்டியது எல்லாவற்றையும் விட முக்கியமானது. அதற்குத் தேவை விரிவான, முறையான, நேர்மையான விசாரணை மட்டுமே-.

இந்திய தேர்தல் ஆணையம் விசாரணையை முன்னெடுக்குமா?

படிக்க வேண்டும்

spot_img