பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த தனி நபர்கள், குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் ஆகியவற்றைச் செய்ய குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் வழங்கி வருகிறது,
இந்நிலையில், பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக ஏழு பயனாளிகளுக்கு அவர் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். ஏழு பயனாளிகளும் தலா ரூ.21.40 லட்சம் கடனுதவி பெற்றுள்ளனர்.
பொருளாதார மேம்பாட்டுக் கழகமானது, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி, வளர்ச்சிக் கழகத்தின் மாநில முகமையாக செயல்பட்டு வருகிறது என்றும் இக்கழகமானது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயனாளிகளுக்கு கடன் வழங்கி வருகிறது என்றும் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கடன் பெறும் பயனாளிகள் வளையல் வியாபாரம், பால் பண்ணை, ஆடு வளர்ப்பு, பட்டு நெசவு, தையல் தொழில், அழகு நிலையம், பலசரக்குக் கடை, உணவகம், துணிக்கடை, தேங்காய். காய்கறி வியாபாரம் போன்ற தொழில்களை மேற்கொள்ள இயலும். தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் வாயிலாக இத்திட்டப் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக ஒருவருக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகைத் திட்டம் போன்றவற்றின் வரிசையில் பொற்கால கடன் திட்டமும் பெண்களின் வாழ்க்கை மேம்பட உதவிடும் என்பதில் சந்தேகமில்லை.
அருமையான திட்டம், பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!



