கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் அமர்ந்து நேரடியாக கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கின்றனர். நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்ததற்கு காரணம் அரசியல் வாக்கு வங்கி தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நிதி ஆயோக் கூட்டம் என்பது குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நடக்கக்கூடிய ஒன்று. அதில் தமிழகத்தின் அழுத்தமான ஆலோசனைகளை, தேவைகளை எடுத்து கூறக்கூடிய ஒரே பிரதிநிதி முதல்வராகத்தான் இருக்க முடியும். அதை அவர் செய்ய தவறிருக்கிறார். இதில் அரசியல் செய்ய கூடாது. நிதி ஆயோக்கில் அரசியல் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.