fbpx
Homeதலையங்கம்சமையல் எரிவாயு விலை- சாதனையும் வேதனையும்!

சமையல் எரிவாயு விலை- சாதனையும் வேதனையும்!

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து பிரதமர் மோடி பிரசாரத்தை முன்னெடுத்தார்.

இதனால், சென்னையில் ரூ.1,118.50ல் இருந்து ரூ.918.50 ஆக விலை குறைக்கப்பட்டது. பிறகு கடந்த மாதம் (செப்டம்பர்), வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.157.50 முதல் ரூ.166.50 வரை குறைத்தனர்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான (அக்டோபர்) புதிய விலை பட்டியலை, நேற்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

ஆனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.203 முதல் ரூ.209 வரை அதிகரிக்கப்பட்டது. இதனால், அதன் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் ரூ.1,695க்கு விற்கப்பட்ட வர்த்தக காஸ் சிலிண்டர், ரூ.203 அதிகரிக்கப்பட்டு ரூ.1,898 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கான விலை மீண்டும் உயர்ந்து உள்ளதால் பொருட்களின் விலை மீண்டும் உயரும் வாய்ப்புகள் உள்ளன.

ஓட்டல்கள், டீக்கடைகள் போன்றவற்றில் இந்த கேஸ் சிலிண்டரையே பயன்படுத்துவதால், அவர்களுக்கு பெரும் சுமையாக இது உள்ளது. இதனால், உணவு பொருட்களின் விலை உயரவும் வாய்ப்பு உள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சரிந்துவந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளதால், சிறு வணிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் – முறைபடுத்தப்படாத ஜிஎஸ்டி, – பணமதிப்பு நீக்கம், – கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளால் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது.

எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரும் மாதங்களிலும் இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,’ என்கின்றனர். இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்ததை பெரும் சாதனையாக பறைசாற்றிக் கொண்ட ஒன்றிய பாஜக அரசு, ஒரே மாதத்தில் விலையை மீண்டும், குறைத்ததை விட அதிகமாக ஏற்றி விட்டது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஏறத்தான் போகிறது.

சாதனை என்பது பொய்; வேதனை என்பதே மெய்!

படிக்க வேண்டும்

spot_img