1990களில் ஆசியாவில் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கு ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1990இல் ஜி20 என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
கடந்தாண்டு இந்தோனேசியா தலைமை பொறுப்பில் இருந்த நிலையில், இந்தாண்டு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றது. அதேபோல அடுத்தாண்டு பிரேசில் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. நேற்றைய தினமே தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவை இந்த ஜி20இல் இருக்கிறது. இதில் இப்போது ஆப்பிரிக்க யூனியனும் இணைந்துள்ளது.
உலகமே வியக்கும் வகையில் ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என உலகின் டாப் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த உச்சி மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் இணைக்கப்பட்டது ரொம்பவே முக்கிய முடிவாகப் பார்க்கப்பட்டது. இது ஆப்பிரிக்க நாடுகளின் அடுத்தகட்ட வளர்ச்சியை உறுதி செய்யும்.
மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய பிரதமர் மோடி, “சிறந்த எதிர்காலத்தை நோக்கி உலகை கொண்டு செல்வதற்கு சர்வதேச அமைப்புகள் அனைத்தும் தற்போதைய நிதர்சனங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டியது அவசியம்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்டபோது வெறும் 51 நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருந்தது. ஆனால், தற்போது 200 நாடுகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தது போலத்தான் இப்போதும் உள்ளது. உலகம் மாறிவிட்டது. மாற்றத்திற்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் பிரதிபலிக்க வேண்டும்“ என்றார்.
ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியா ஏற்கப்பட வேண்டும் என்ற தனது ஆசையை பிரதமர் மோடி வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. அந்த நாள் விரைவில் மலரும் என்பதில் ஐயமில்லை.
ஒட்டுமொத்தத்தில் பிரதமர் மோடி ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். சர்வதேச நாணய நிதியம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகள்.
ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்தியாவின் தாரக மந்திரம் அனைத்து பிரதிநிதிகளிடமும் வலுவாக எதிரொலித்தது” என பதிவிட்டுள்ளது.
உலகமே பிரதமர் மோடியைப் பாராட்டுகிறது.
நாமும் பாராட்டி வாழ்த்துவோம்!