Homeபிற செய்திகள்கோவை மாநகரில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சிங்கப்பெண் அதிரடிப்படை முதல்வர் விஜய்க்கு மாணவிகள் மனப்பூர்வமாக நன்றி

கோவை மாநகரில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சிங்கப்பெண் அதிரடிப்படை முதல்வர் விஜய்க்கு மாணவிகள் மனப்பூர்வமாக நன்றி

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குகிறது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்லக்கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில், காவல்துறையின் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களைத் தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர்.
கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளான பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான செம்மொழி பூங்கா, பேருந்து நிலையம், கல்லூரிகள் மற்றும் பள்ளிக் கூடங்கள் ஆகிய இடங்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படைகள் நேரடியாக சென்று மாணவ மாணவிகளுக்கும், சிறப்பு பொதுமக்களுக்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் செயல்பாடுகள் பற்றியும் மற்றும் உதவிஎண்ணும் கொடுக்கப்பட்டு வரப்படுகிறது.
கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில், 2 சிங்கப்பெண் அதிரடிப்படைகள் (வடக்கு மற்றும் தெற்கு) நியமிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு ஷிப்ட்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில், வடக்கு சரகத்தில் 2 சிங்கப்பெண் படையும், தெற்கு சரகத்தில் 2 சிங்கப்பெண் படையும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு சிங்கப்பெண் அதிரடிப்படையில் 1 பெண் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 2 பெண் காவலர்கள் மற்றும் 1 காவல் ஓட்டுநர் என மொத்தம் 12 காவலர்கள் தனிக்காவல் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய தகவல்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண்ணிற்கோ (1091), காவல் கட்டுபாட்டு அறையிலிருந்தோ (100) கிடைத்தவுடன் சம்பந்தபட்ட இடத்திற்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையானது விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை விசாரித்து பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைத்தும், நடவடிக்கை தேவைப்படின் சம்பந்தபட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தும் வருகிறார்கள்.
கோவை மாநகர எல்லைக்குள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பல்வேறு குற்றங்கள் நடவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டும் பள்ளிகள், கல்லூரிகள், வெளி மாநில தொழிலாளர்கள் பேருந்து நிலையங்கள், குடியிருக்கும் பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களுக்கு சென்று சிறுவர்களுக்கும், பெண்களுக்கும், முதியவர்களுக்கும் வேண்டிய உதவிகள் செய்துகொடுத்தும், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதுவரை 6,860 இடங்களில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு போக் சோ பற்றியும், தவறான தொடுதல் பற்றியும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பள்ளி இடைநிற்றல் மாணவர்களின் பட்டியல் பெறப்பட்டு மாணவர்களின் இருப்பிடம், தந்தையரை சந்தித்துக்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாணவரின் எதிர்காலம் குறித்து அறிவுரை, ஆலோசனை வழங்கியும் வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிவைக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு சிங்கப்பெண் அதிரடிப்படையினர் மொத்தம் 79 பள்ளி இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடவாமல் இருக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையானது கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
மேற்படி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கோவை மாநகர காவல்துறை எல்லைகளிலுள்ள கல்லூரிகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் / நிறுத்தங்கள், குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகள் போன்ற இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பணியினை மேற்கொள்வதோடு, காவல் உதவி செயலி, காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண், பெண்கள் பாதுகாப்பு உதவி எண், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் ஆகியவை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
கோவை மாநகரிலுள்ள பாதுகாப்பற்ற பகுதிகளை அதன் தன்மைகேற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என மூன்று பகுதிகளாக பிரித்து அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை சிங்கப்பெண் அதிரடிப்படை ஆய்வாளர் அமிர்தபிரியா தெரிவித்ததாவது:


பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் சிங்கப் பெண் அதிரடிப்படை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வரும் சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடர்பு கொள்ள இலவச தொலைப்பேசி எண்ணாக 1091 அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
அந்த பிரச்சனையை சரிசெய்ய அல்லது தீர்வு காண சிங்கப் பெண் அதிரடிப்படை செயல்படும். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். மேலும், பெண்கள் தாமாக முன்வந்து புகார் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது சிங்கப்பெண்களுக்கான இந்த சீருடையில் எங்களை பார்க்கும் பொழுது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாங்கள் நண்பர்களாக தெரிவதாகவும், எங்களை எளிதாக அணுக முடிவதாகவும் தெரிவித்தார்கள். இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றதாக திகழ்கிறது. இதுபோன்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிங்கப்பெண் அதிரடிப்படையின் சிறப்பு குறித்து, கல்லூரி மாணவி சாதனா தெரிவித்ததாவது:


நான் கோவை புலியகுளம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியம் பயின்று வருகிறேன். கல்லூரிக்குச் செல்வது, பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது எனப் பல்வேறு தேவைகளுக்காக நாங்கள் தினமும் வெளியே செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், பெண்கள் மற்றும் மாணவியர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு முக்கியத்துவம் அளிப்பது எங்களைப் போன்ற மாணவியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் அச்சமின்றிக் கல்வி கற்று, தன்னம்பிக்கையுடன் எங்களது இலக்குகளை அடைய இது ஊக்கமளிக்கிறது.
எங்களது கல்லூரியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கல்லூரி மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புலியகுளம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று வரும் மாணவி சிபானா, கூறியதாவது:


படிப்பில் முன்னேற வேண்டும், எனது பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது இலக்காகும். கல்லூரிக்குச் செல்லும்போதும், மாலை நேரங்களில் வீடு திரும்பும்போதும் பெண்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்களைப் போன்ற மாணவியர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக இருப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் எவ்வித அச்சமுமின்றி முன்னேற வேண்டும் என்பதில் அரசு காட்டும் அக்கறை மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக இத்தகைய சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் கல்லூரி மாணவியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி),
கோவை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img