உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்தது. உச்சநீதிமன்ற வரலாற்றில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு வருவது இது மூன்றாவது முறையாகும்.
நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம்.திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமைத்தார். திருமணத் தகராறு மற்றும் பிணை மனு உள்ளிட்ட 32 வழக்குகள் இந்த நீதிபதிகள் அமர்வு முன் பட்டியலிடப்பட்டிருந்தன.
இது ஒரு புரட்சிகரமான, ஆண் & பெண் சமத்துவத்தை நிலைநாட்டும் உன்னதமான முடிவு. இதனை உச்சநீதிமன்றத்திலேயே நடத்தி இருப்பது நாட்டிற்கே ஒரு வழிகாட்டுதலாக அமையும்.
இதற்கு முன், 2013 மற்றும் 2018 இல், பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு இருந்தது. 2013ல் நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய பெஞ்சில் இருந்தனர். 2018இல், நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வில் உறுப்பினர்களாக இருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் தேவை. ஆனால் தற்போது 27 நீதிபதிகளே உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி, நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் உள்ளனர்.
இன்னும் கூடுதலாக பெண் நீதிபதிகள் இடம்பெற வேண்டும். மீதமுள்ள இடங்களை நிரப்பும்போது பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர வேண்டும்!