திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் குழு கூட்டம் நடைபெற்றது. இதன் வாயிலாக இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புடன் கூடிய குறுகிய காலப் பயிற்சியை நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்கள், 30 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் வாயிலாக வழங்கலாம். இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) சார்பாக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முன்னனி நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. மேலும், பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வி பயிலாதவர்களை கண்டறிந்து அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.