fbpx
Homeபிற செய்திகள்கோவை அருகே சின்னதடாகத்தில் செய்தியாளர்கள் பயணத்தில் ஜெர்பரா மலர் சாகுபடியை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர்

கோவை அருகே சின்னதடாகத்தில் செய்தியாளர்கள் பயணத்தில் ஜெர்பரா மலர் சாகுபடியை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் சின்னத்தடாகத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பசுமை குடிலில் ஜெர்பரா மலர் சாகுபடி செய்யப் பட்டுள்ளதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப் பனவர் தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இச்செய்தியாளர் பயணத்தின் போது தோட்டக்கலை துணை இயக்குநர் பாலசுப்ரமணியம், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார், தோட்டக் கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இச்செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப் பனவர் கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் 40 சதவீத மான்யத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் பரப்பு அதிகரித்தல், வாழைத்தார் பாதுகாப்பு உறை வழங்குதல், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், 50 சதவீத மான்யத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பு, பசுமைக்குடில் அமைத்தல், நிழல் வலை கூடாரம், நிலப்போர்வை அமைத்தல், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை, தரம் பிரித்துசிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்புக் கிடங்கு, நடமாடும் விற்பனை ஊர்தி ஆகிய அறுவடை பின் செய்நேர்த்தி இனங்கள், மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்க தேனீ பெட்டிகள், தேனீ காலணிகள், தேன் எடுக்கும் இயந்திரங்கள் வழங்குதல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மானியம் வழங்குதல் ஆகிய இனங்களில் கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15.38 கோடி மதிப்பில் 9105 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும், பசுமைக்குடில் சாகுபடி என்பது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பயிர்களை வளர்ப்பது ஆகும். இதனால் பலமுக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

வெளி நிலத்தைவிட 3–5 மடங்குவரை அதிக விளைச்சல் கிடைக்கும். வருடம் முழுவதும் மழை, வெயில், குளிர்போன்ற காலநிலை மாற்றங்கள் பாதிக்காத வண்ணம் சாகுபடி செய்து உயர் தரமான ஒரேஅளவு, நல்லநிறம், தரம் கொண்ட காய்கறி/ மலர்கள் விளை பொருட்கள் கிடைக்கும்.

வெளி சூழலிலிருந்து பாதுகாப்பு இருப்பதால் நோய் மற்றும் பூச்சிகள் தாக்கம் குறையும். கட்டுப்பாடு உள்ள சொட்டுநீர் பாசனம் மூலம் 40–50% வரை நீர் மற்றும் உர சேமிப்பு செய்யலாம், குடைமிளகாய், தக்காளி, வெள்ளரிக்காய், ஜெர்பரா போன்ற உயர்மதிப்பு பயிர்கள் மூலம் நல்ல லாபமும், அதிக வருமானமும் கிடைக்கும் தரமான உற்பத்தி காரணமாக ஏற்றுமதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தோட்டக்கலைத் துறையின் மூலம் பசுமை குடில் அமைப்பதற்கு 50% மானியமாக வழங்கபடுகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் 32000 ச.மீ மற்றும் ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் பசுமை குடில் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் சின்ன தடாகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார், 1000 சதுர மீட்டர் பரப்பிற்கு பசுமை குடில் அமைத்து ரூ.5,25,000 மானியத்தில் ஜெர்பரா மலர்கள் சாகுபடி செய்துள்ளார்.
அவரது பசுமை குடில் அமைப்பினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து கேட்டறியப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img