வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் சிதம்பரம் நகராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் சிதம்பரம் நகரப் பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம் ஆகிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்தும் நேற்று ஞாயிறுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:
தற்போது சிதம்பரம் நகரத்தின் வளர்ச்சியை கருதி அருகே உள்ள கிராமங்களை சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை உள்ள நிலையில் சிதம் பரம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் கூடுதலான பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும், தற்போதைய மக்கள்தொகை பெருக்கத்தால் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாலும், பொது மக்களின் தேவைக்கேற்ப அனைத்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்திடும் பொருட்டு நகரப் பேருந்து நிலையம் நவீன பேருந்து நிலையமாக ரூ.4.47 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் நலன் கருதி சிதம்பரம் நகருக்கு வெளியே லால்புரம் கிராமத்தில் 8.11 ஏக்கர் பரப்பளவில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் புதிய புறநகர் பேருந்து நிலையம் 50 பேருந்து நிறுத்துமிடம், 52 கடைகள், உணவகம். தாய்மார்கள் பாலூட்டும் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை. காத்திருப்பு கூடம். ஏடிம் அறை மற்றும் கழிவறை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டிலும், மேலும் புதிய பேருந்து நிலையத்திற்கு அணுகு மற்றும் சேவை சாலை அமைக்கவும், தடுப்பு சுவர் மற்றும் மழைநீர் வடிகால் பணி, தேசிய நெடுஞ்சாலைக்கு நிகராக பேருந்து நிலையத்தில் மண் நிரப்பும் பணி போன்ற கூடுதல் கட்டுமானப் பணிகளும் ரூ.8.30 கோடி மதிப்பீட்டிலும் என ரூ.23.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 40% பணிகள் முடிவுற்றுள்ளது.சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்குட்பட்ட 36 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம், அம்ரூத் 2.0 மற்றும் ஜல் ஜீவன் மிஷன் நிதியின் கீழ் செயல்படுத்த நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.255.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது குழாய் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட இதரப்பணிகள் 71 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்பணிகளை விரைவுபடுத்த வாரந்தோறும் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இன்னும் 8 மாத காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
மேலும், சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட நான்கு வீதிகளிலும் புதைவட மின்கம்பிகள் அமைத்து மின்சாரம் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆய்வின் போது சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார் நகராட்சி ஆணையாளர் மல்லிகா, நகராட்சி பொறியாளர் சுரேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.