நாமக்கல் நகராட்சி கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து மேயர், துணை மேயர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே மேயருக்கு தனியாக அலுவலகம் உள்ள நிலையில், துணை மேயருக்கு அலுவலகம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து ஆணையாளர் அறைக்கு எதிரில் துணை மேயருக்கு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.
இதன் திறப்புவிழாவில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் மேலும் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் அன்பழகன் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து துணை மேயர் பூபதியை அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் கலாநிதி, ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.