தமிழகத்தில் கடந்த ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டங்களும் செயல்படுத்த கூடாது என்பது விதி.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் வரும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒரத்தநாடு, வடசேரி, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசின் சார்பில் ஆயத்த பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தஞ்சை மாவட்ட விவசாயிகள் இடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விவசாயப் பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் தோண்டினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும், இதனால் லட்சக்கணக்கான விவசாயிகளும், பொது மக்களும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள்.
ஆகவே விவசாயிகளின் வருங்கால நலன், மற்றும் வாழ்வாதாரத்தை மனதில்கொண்டு வேளாண் மண்டலத்தில், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஆயத்தப் பணியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டங்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஒன்றிய அரசின் இந்த டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். ‘ மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்; விவசாயம்தான் வேண்டும்‘ என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை நேற்று எழுதினார். அதில், மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.
தமிழக சட்டப்பேரவையிலும் இன்று இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. நிலக்கரி சுரங்கம் தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் டெல்டர் மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க கூடாது என்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இறுதியாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என்றும் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்.
தவறும்பட்சத்தில், அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து அது பெரும் போராட்டமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் வெடிக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அனுமதித்து பாலைவனம் போல மாற ஒருபோதும் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்!



