fbpx
Homeபிற செய்திகள்தமிழக மீனவர்களை முடக்கும் இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு!

தமிழக மீனவர்களை முடக்கும் இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகை கைப்பற்றியதோடு 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, 12 மீனவர்களுக்கும் தலா ரூ.1.5 கோடி (இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம்) அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதத்தை கட்ட தவறும் பட்சத்தில் ஒவ்வொரு மீனவரும் ஆறு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பேரதிர்ச்சி தருகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு முடக்கும் வகையில் அதிகபட்ச தண்டனை விதித்து தாக்குதல் நடத்தும் நிலைக்கு அந்நாட்டு நீதிமன்றம் சென்றிருப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, பெரும் கவலையளிப்பதும் ஆகும்.

அன்றாட கூலி உழைப்பில் வாழ்வாதாரம் பெற்றுள்ள மீனவர்கள் தலா ரூ.42 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது கற்பனைக்கு எட்டாத தாக்குதலாகும். தமிழக மீனவர்களை ஆத்திரமூட்டும் விளைவு கொண்டதாகும்.

ஆயுள் முழுவதும் உழைத்தாலும் செலுத்த முடியாத அபராதம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையே முடக்கி விடலாம் என்ற மாற்றுத்திட்டத்தை இலங்கை அரசு கையிலெடுத்து இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

நட்பு நாடு என்று கூறிக்கொண்டே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிலை குலையச் செய்யும் இலங்கை அரசின் இந்த அடிப்படை மனித உரிமைகளை மீறும் போக்கினை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலாகி விடும்.

எனவே, மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். இலங்கை அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி பல மில்லியன் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும்.

மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசை மனிதாபிமானத்துடன் முடிவு எடுக்க வைப்பதுடன், தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றம் அபராதம் விதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இருநாட்டு கூட்டுக் குழு கூட்டப்பட வேண்டும்.

அவசர நடவடிக்கையாக மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பெரும் தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை தூதரகம் மூலமாக வழக்கில் இருந்து விடுவிப்பதோடு, அபராதம் செலுத்துவதில் இருந்தும் பாதுகாக்க வேண்டும்.

என்ன செய்யப்போகிறார், பிரதமர் நரேந்திர மோடி? என்ற கேள்வியோடும் ஏதாவது செய்ய மாட்டாரா? என்ற ஏக்கத்தோடும் தமிழக மீனவ சமுதாயம் காத்திருக்கிறது!

படிக்க வேண்டும்

spot_img