கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சருமான ஈரோடு சு.முத்துசாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான அரசாணையில் தலைமைச் செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தப் பொறுப்பில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த பொறுப்பில் இருந்தபடி கொங்கு மண்டலத்தையே திமுகவின் கோட்டையாக மாற்றி பெரும் திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தவர் செந்தில்பாலாஜி என்றால் அதனை மாற்றுக் கட்சியினரும் மறுக்க மாட்டார்கள். இது அவரது பெருஞ்சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது இருதய அறுவைச் சிகிச்சைக்கு பிறகு காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வரும் அவர், இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்.
எனினும் இலாகாவே இல்லாமல் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நீடிப்பது சரியாக இருக்காது என்பதால் அந்தப் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
அவருக்குப் பதிலாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சு.முத்துசாமி எளிமையானவர்; அரசியல் அனுபவம் வாய்ந்தவர்; பொதுமக்களிடம் நற்பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறார்.
இனி, கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி துரிதப்படுத்துவார்.
நலத்திட்ட உதவிகள் பொதுமக்களைச் சென்றடைதலைக் கண்காணித்து பணியாற்றிடவும் இயற்கை சீற்றம், நோய்த்தொற்று மற்றும் இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் அவருக்கு அரசாணை மூலம் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முத்துசாமி மேற்பார்வையில் கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
பொறுப்பு அமைச்சர் முத்துசாமியை கோவை மாவட்ட மக்களோடு சேர்ந்து நாமும் வரவேற்று வாழ்த்துவோம்!



