fbpx
Homeதலையங்கம்கோவையில் நகரப் பேருந்து ஓட்டும் சாதனைப் பெண்!

கோவையில் நகரப் பேருந்து ஓட்டும் சாதனைப் பெண்!

கோவையைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டிருந்தார். அந்தக் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

“டயர் சைஸ் கூட இல்ல, உனக்கு பேருந்து ஓட்டணுமா?” என்று கேட்டவர்கள் முன்பு இன்று கெத்தாக பேருந்து ஓட்டுகிறார் ஷர்மிளா. ஆட்டோ ஓட்டுநரின் மகளான அவர் ஃபார்மசி பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளார்.

முழு நேரமாக ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஷர்மிளா, கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதைத் தன்னுடைய கனவாகக் கொண்டிருந்தார். தனது கனவை அடைவதற்கான பாதையில் பயணித்து, பேருந்து ஓட்டுவதற்கான பயிற்சி பெற்று அதற்கான உரிமமும் பெற்றுள்ளார்.

ஆண்கள் மட்டுமே அதிகம் கோலோச்சும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஷர்மிளா.

கடந்த மூன்று ஆண்டுகளாக முழு நேரமாக ஆட்டோ ஓட்டி வரும் ஷர்மிளாவுக்கு பேருந்து ஓட்ட வேண்டும் என்கிற ஆசை வந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு கனரக வாகனங்களை இயக்குவதற்கான உரிமத்தை அவர் பெற்றார். ஆனாலும் அவருக்கு பேருந்து ஓட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தபோதும் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்தார்.

இந்நிலையில் பேருந்து இயக்கும் வாய்ப்பு ஷர்மிளாவை தேடி வந்துள்ளது. பெண்கள் பல ஊர்களில் பேருந்து ஓட்டியுள்ளார்கள். ஆனால் கோவையில் விசாரித்த வரை அப்படி யாரும் இல்லை.

கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வரை செல்லும் வீவீ டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் தனியார் பேருந்தை ஓட்டத் தொடங்கி இருக்கிறார் ஷர்மிளா. கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா கூறுகிறார்:
நான் பேருந்து ஓட்டுநராக மாற என் தந்தை தான் காரணம். அப்பா ரொம்ப பக்கபலமா இருந்தாங்க.

பேருந்து ஓட்டும் பயிற்சிக்குச் சென்றேன். அப்பா வேலைக்குச் செல்வதால் ஓட்டுநர் பயிற்சிக்கு செல்லும்போதெல்லாம் அம்மா தான் என்னுடன் அனைத்து இடங்களுக்கும் வருவார். டிரைவிங் மீது இருந்த ஈடுபாட்டால் பேருந்து ஓட்ட எளிதாகப் பழகிக்கொள்ள முடிந்தது.

பயிற்சிகளை முடித்து நான்கு மாதங்களுக்கு முன்பு பேருந்து உரிமம் பெற்றுவிட்டேன். பேருந்து ஓட்டும் பயிற்சிக்குச் செல்ல ஆரம்பித்தபோது நகைப்புடன் ஏளனமாகப் பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாகப் பார்க்கிறார்கள்.
பேருந்து இயக்க அனுமதி கேட்டுச் சென்றால் திறமையை வைத்து அல்லாமல் உயரத்தை வைத்து மதிப்பிட்டார்கள்.

’எலிக்குட்டி மாதிரி இருக்க நீ பஸ்ஸெல்லாம் ஓட்டிருவியா, டயர் சைஸ் தான் இருக்க உனக்கு பஸ் வேணுமா’ என்றுகூட என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால்தான் எவராலும் அடுத்த நிலைக்கு வரமுடியும்.

பிறகு ஆட்டோ ஓட்டிக் கொண்டே பேருந்து இயக்கும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். என் ஆசையெல்லாம் பேருந்தில் என் அம்மா அப்பாவை ஏற்றிக் கொண்டு கெத்தாக வந்து நிற்க வேண்டும். எங்கள் ஊரான கோவையில் முதல் பெண் பேருந்து டிரைவராக வேண்டும் என்பதுதான்.

தமிழ்நாட்டில் பெண் கனரக வாகன ஓட்டுநர்கள் உள்ளார்கள். கேரளாவிலும்கூட இருக்கிறார்கள். ஆனால் கோவையில் பேருந்து ஓட்டும் பெண் யாரும் இல்லை. அந்தப் பெருமை எனக்கு கிடைக்க வேண்டும் என்று என் குடும்பம் ஆசைப்பட்டது. அது இன்று நிறைவேறியுள்ளது. இவ்வாறு குதூகலத்துடன் அவர் தெரிவித்தார்.

சாதிக்க விரும்பும் பெண்களுக்கு ஷர்மிளா முன்னுதாரணமாகத் திகழ்கிறார். கோவை மாநகரமே அவரை வாழ்த்துகிறது; நாமும் வாழ்த்துவோம்!

படிக்க வேண்டும்

spot_img