ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை வன்னிவேடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழதடைந்துள்ள பழைய கட்டடத்தை சீரமைத்து நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.70.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கற்றல், கற்பித்தல் திறன்களை வகுப்பு வாரியாக ஆய்வு மேற்கொண்டார். கற்றல் திறன் குறைந்த மாணவர்களை ஊக்குவிக்க சிறப்பு வகுப்புகள் எடுக்கவும், மாணவர்கள் பள்ளி தொடர் வருகையை கண்காணித்திடவும், பள்ளி வகுப்பறைகள், பள்ளி வளாகத்தை எப்போதும் தூய்மைப்படுத்திடவும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திடவும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
பள்ளியில் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் மற்றும் தற்போது நடைபெற்று முடிந்த காலாண்டு, அரையாண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளது. அதனை அதிகரிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தேர்ச்சி சதவீதம் உயர்த்த அனைத்து ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிட வேண் டுமென அறிவுரைகள் வழங்கினார்.
இடிக்கப்பட வேண்டிய கழிப்பறைக் கட்டிடங்களை உடனடியாக இடிக்கு மாறும், மேலும் பள்ளிக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதாக வழிவகைகள் வழங்கினார். பின்னர், எதிர்வரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்காக முகப்புத்தாளுடன் கூடிய விடைத்தாள்கள் தைக்கும் பணியினை பார்வையிட்டார்.
இந்த ஆய்வில் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டாட்சியர் அருள் செல்வம், நேர்முக உதவியாளர் தனஞ்செழியன். தலைமையாசிரியர் பவானி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.