கடந்த நவம்பர் மாதத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியை பிடித்தது. ஏனைய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.
ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாஜக, ஆட்சியை பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய முடியாமல் பாஜக தலைமை திணறி வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின் நேற்று சத்தீஸ்கரில் முதல்வரை பாஜக மேலிடம் அறிவித்தது. எனினும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிக்கிறது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்தார். பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், மீண்டும் முதல்வர் பதவி அவருக்கே வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.
ஏனெனில், எம்.பி பதவியை ராஜினாமா செய்த நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், உள்ளிட்டோர் முதல்வர் பதவியை கைப்பற்ற கவனமாக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இவர்களை தவிர மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார். குவாலியர், சம்பல் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிரூபித்து இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா முதல்வர் பதவிக்கான ரேசில் உள்ளார் என்று தெரிகிறது.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் இன்று மாலை மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேசத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் உடைந்து விடும்.
இன்னொரு பக்கம் ராஜஸ்தான் மாநிலத்திலும் இதே நிலைதான் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு இப்போது முதல்வரை தேர்வு செய்வது அவ்வளவு ஈசியான வேலையாக இல்லை.
ஏனெனில், பாஜக மேலிடம் வசுந்தர ராஜே சிந்தியாவை முதல்வராக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில், வசுந்தர ராஜே சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்படுவார் என்பதால் பாஜக மேலிடம் வேறு ஒருவரை தேர்வு செய்ய முனைப்பு காட்டுவதாக சொல்லப்படுகிறது.
அதாவது சாமியார் பாலக்நாத்தை முதல்வராக்கவே பாஜக மேலிடம் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் வசுந்தராஜா ராஜே சிந்தியா முதல்வர் பதவியை விட்டு விடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபக்கம் என்றால் வசுந்தராஜா ராஜேவுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவும் அதிகமாக உள்ளது.
முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் மூத்த தலைவர்களுக்குள் போட்டா போட்டி நிலவி வரும் நிலையில் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு மாநில முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தேர்தல் முடிந்து இத்தனை நாள் ஆகியும் தங்கள் முதல்வர் யார்? என்பதை அறிய முடியாமல் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநில மக்கள் குழம்பிப் போய் ஒருவித டென்ஷனில் உள்ளனர்.
கிரிக்கெட்டில் பந்து வீச ஒரு நொடி தாமதம் ஆனாலும் வீரர் வெளியேற்றப்பட்ட சம்பவம் இந்த உலகக்கோப்பை போட்டியில் நடந்தது.
அதுபோல முதல்வரைத் தேர்வு செய்வதிலும் ஒருசில நாட்களைக் காலக்கெடுவாக தேர்தல் ஆணையம் விதித்தால் என்ன? வீணாக மக்கள் டென்ஷன் ஆக வேண்டாமே!



