fbpx
Homeதலையங்கம்நன்றிக்கடன் பட்ட கிறிஸ்தவ மக்கள்!

நன்றிக்கடன் பட்ட கிறிஸ்தவ மக்கள்!

கடந்த காலங்களில் இந்திய சமூகத்தில் அரங்கேறிய அவலங்கள் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள். இந்து மதத்தை பின்பற்றும் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமே பட்டியலின வகுப்பில் சேர்க்க வேண்டும் என 1950 ம் ஆண்டு சட்டத்தின் வாயிலாக இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களை ஏற்றுக்கொண்ட தலித் மக்கள் எஸ்சி பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இதனால் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் அதிகாரம் உள்ளிட்ட பல சலுகைகளை மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள் இழந்தனர்.

அப்போது தொடங்கி ஏறக்குறைய 73 ஆண்டுகளாக மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவ மக்களுக்கு பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

இந்தச்சூழலில் தான், ‘’கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு பட்டியலின மக்களுக்கான சட்ட சலுகைகளை வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்து பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சட்டப் போராட்டமாக இருந்த இந்த கோரிக்கையை, தமிழ்நாடு சட்டமன்றம் மூலம் தனித் தீர்மானமாக கொண்டு வந்து கிறிஸ்துவ மக்களின் அந்த கோரிக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்தத் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முதல்வருக்கு இந்த மாதம் தொடக்கத்தில் கடிதம் எழுதி இருந்தார். அதற்கான பதிலை இந்த மாதம் முடிவதற்குள்ளாகவே தீர்மானமாக நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் நமது முதல்வர் என சட்டமன்றத்தில் அவர் புகழாரம் சூட்டி இருக்கிறார்.

நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்லை எனக்கு….என பாட்டுப்பாடி தன் நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார், இனிகோ இருதயராஜ்.
ஆக, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் பின் தங்கியுள்ள மதம் மாறிய ஒரே காரணத்திற்காக தலித் கிறிஸ்தவர்களுக்கான சலுகைகள் மறுக்கப்படுவது நியாயம் அல்ல.

மதம் மாறிய பின்னரும் கூட தலித் கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் அதே கொடுமைகளை புறக்கணிப்புகளை இந்த சமூகத் தில் அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளில் இருந்து தலித் கிறிஸ்தவர்கள் தப்பவில்லை. மதம் மாறிய பின்னரும் கூட அவர்களது பொருளாதார நிலையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்று பல அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

ஆனால் 2019 ஆண்டு இந்த சலுகைகள் தேவை இல்லை என்று ஒன்றிய அரசு வழங்க மறுத்துவிட்டது. பிற சமூகத்தினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல சலுகைகள் காரணமாக, இந்து தலித்துகளுக்கும் மதம் மாறிய தலித்துகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகி விட்டது.

எனவே தான், இந்த நிலை எல்லாம் மாற, தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியலின வகுப்பில் சேர்க்க வேண்டும் என சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிறிஸ்தவ மக்கள் காலமெல்லாம் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது!

படிக்க வேண்டும்

spot_img