பில்லூர் அணை தூர்வாரும் பணியினை துரிதப்படுத்தி முடித்திட தமிழக அரசின் தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் முக்கிய குடிநீராதாரமாக இருந்து வரும் பில்லூர் அணையின் நீர்மட்டம் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வெகுவாக குறைந்து வந்தது. இதனையடுத்து நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி அணையில் இருந்து நீர் பில்லூர் அணைக்கு குழாய்கள் மூலமாக கொண்டு வரப்பட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 100 அடியில் நேற்றைய நிலவரப்படி 81 அடியாக உள்ளது.இந்த நிலையில் நேற்று தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பில்லூர் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அணையின் நீர்மட்டம்,நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அணையினை தூர்வாரும் பணியினை துரிதப்படுத்தி முடித்திட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ஷர்மிளா, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) பிரேம்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செல்லமுத்து, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.