உலக பக்கவாத தினத் தையொட்டி நடத்தப்பட்ட வெற்றி பெருமித நிகழ்வில் நாலரை மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் வழங்கியிருக்கும் நம்பிக்கை தரும் விளைவுகளை சென்னை காவேரி மருத்துவமனை பகிர்ந்து கொண்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், காவேரி மருத்துவமனையின் பக்கவாத சிகிச்சைக் குழுக்கள், சென்னையில் 956 பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இவர்களுள், 120க்கும் மேற்பட்ட நோயாளிகள் முதல் அறிகுறி தோன்றியதிலிருந்து நாலரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.
இவர்களுள் 82க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பக்கவா தத்திலிருந்து முழுமையான மீட்சி கிடைத்திருக்கிறது. நிரந்தர சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கு உகந்த நேரத்திற்குள் மூளைக்கு இரத்தஓட்டம் மீண்டும் இந்நபர்களுக்கு நிலை நாட்டப்பட்டது என்பதையே இது உணர்த்துகிறது.
வடபழனி, காவேரி மருத்துவமனையின் இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். பெரியகருப்பன் பேசுகையில், “பக்கவாதம் / ஸ்ட்ரோக் ஏற்படும்போது ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது. கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும், மூளையிலுள்ள ஆயிரக்கணக்கான செல்கள் இழக்கப்படுகின்றன. ஆனால், நோயாளிகள் மிக விரைவாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறபோது அவர்களது உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பேசவும், நடமாடவும் அவர்களது அவசியமான திறனை சேதமின்றி எங்களால் காப்பாற்ற முடியும்” என்றார்.
ரேடியல் சாலை, காவேரி மருத்துவமனையின் இடையீடு கதிர்வீச்சியல் (நரம்பியல்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஜி.சதீஷ் கூறியதாவது:
பக்கவாதத்திற்கான சிகிச்சை என்பது, அறிவியல், துல்லியம் மற்றும் குழுவாக இணைந்து செயல்படுவது என்பவற்றின் ஒருங்கிணைந்த கலவையாகும். உரிய நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நோயாளிகள் வந்து சேரும்போது, அவர்களுக்கு சிகிச்சையினால் கிடைக்கும் விளைவுகள் உண்மையிலேயே வியக்க வைக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
“திரும்பவும் விரைவாக இயல்பான நபராக நான் உணர்கிறேன் என்று ஒரு நோயாளி புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் சொல்லும் தருணம் தான் எந்தவொரு மருத்துவரும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்ற மிகப்பெரிய சிகிச்சை விளைவாக இருக்கிறது.” என்று ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையின், இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். சத்ய நாராயணன் கூறினார்.
காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “விரைவாக செயல்படுவது, சரியான சிகிச்சை அளிப்பது மற்றும் வாழ்க்கையை திரும்ப வழங்குவது என்பதே சென்னை வாழ் மக்களுக்கு நாங்கள் வழங்கும் வாக்குறுதியாக இருக்கிறது ” என்றார்.



