சென்னையை அடுத்த காட்டங்குளத்தூரில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் ஓர் அங்கமான எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்தாண்டு மருத்துவம் சார்ந்த பல்வேறு அறிவியல் பட்டப்படிப்புகளில் பயில 1635 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அந்த மாணவர்களை வரவேற்று கல்லூரியில் இணைக்கும் நிகழ்ச்சி எஸ்ஆர்எம் நிறுவன வளாகத்தில் நடந்தது. எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய டீன் டாக்டர் நிதின் மதுசூதன் நகர்கர் வரவேற்றார்.
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி பேசியதாவது:
1985-ம் ஆண்டு 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 22,000 பேர் பயிலும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
நாட்டில் உள்ள மிகச்சிறந்த 20 நிறுவனங்களில் ஒன்றாக எஸ்ஆர்எம் விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
பேராசிரியர்கள் மூலமாக அறிந்து மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினர் சென்னை மண்டல வருமான வரி ஆணையர் வி.நந்தகுமார் பேசும்போது, 1635 மாணவர்களை ஒட்டுமொத்தமாக பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படிப்புக்குப் பின் உங்கள் பணி அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்ணல் டாக்டர் ஏ.ரவிக்குமார், கூடுதல் பதிவாளர் முனைவர் டி.மைதிலி, மருத்துவக் கல்லூரி ஆலோசகர் டாக்டர் ஏ.சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.