சென்னையில் புயல் நிவாரண முகாம்களை அரசு ஏற்படுத்தியிருந்தாலும், அந்த நிவாரண முகாம்களுக்கு செல்வதற்குகூட செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். இப்போது நிலைமை சீரடைந்து வருகிறது.
இந்த சூழலில்தான், இஸ்லாமியர்கள் செய்த காரியம், புல்லரிக்க வைத்துவிட்டது. அதுவும் பூந்தமல்லி பள்ளிவாசல், சோஷியல் மீடியாவில் அறிவிப்பையே செய்துவிட்டது. இது தொடர்பாக அந்த பள்ளிவாசலின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதாவது:
“அஸ்ஸலாமு அலைக்கும் நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று மிக்ஜாம் புயலால் மழை அதிகமாக பெய்து வருவதால் பூவிருந்தவல்லி பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் பள்ளிவாசலில் தண்ணீர் பிடிக்கலாம், மொபைல் மற்றும் டார்ச் லைட் போன்ற சாதனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம்.
மழை அதிகமாக இருப்பதால் வீட்டிற்குள் மழைநீர் வந்தவர்கள் பள்ளிவாசலில் தங்கலாம்.. அன்புடன் அழைப்பு கொடுக்கப்படுகிறது. பள்ளி தொழுகைக்கு மட்டும் அல்ல” என பதிவிட்டது.
“அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பள்ளி தொழுகைக்கு மட்டும் அல்ல” என்ற இந்த அறிவிப்பானது, காண்போரை நெகிழ வைத்தது.. உருக வைத்தது.. சிலிர்க்க வைத்தது.
இப்படி ஒரு அறிவிப்பை பார்த்ததுமே, தங்குவதற்கு இடமின்றி அவதிப்பட்ட அனைத்து மதங்களை சேர்ந்தவர்களுமே, பள்ளிவாசலுக்குள் திரண்டனர்.
அவர்களுக்கு வயிறார உணவு தரப்பட்டது. இதேபோல் சென்னை பாலவாக்கம் மசூதியிலும் அனைத்து சமுதாய மக்களும் மசூதியில் தங்க வரலாம் என்று அழைப்பு விடுத் திருந்தனர்.
மேலும், அனைத்து சமுதாய மக்களுக்கும் 150 கிலோ அரிசி கொண்டு உணவு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே, சென்னை லயோலா கல்லூரியின் கதவுகளும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு உணவும் தயார் செய்து தரப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் எல்லாமே மனித மனங்களை நெகிழ செய்து வருகிறது. மனித பிறப்பின் அருமையையும், அதன் உன்னதத்தையும், இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஒவ்வொருமுறையும் நமக்கு உணர்த்திவிட்டுச் செல்கின்றன.
மக்கள் வெள்ளத்துயரில் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடும் அவல நிலையையும் பார்க்கிறோம்.
எவ்வளவுதான் இடர்பாடுகளை சிலர் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதநேயமும், ஈரம் கசியும் உள்ளங்களும் தமிழ்நாட்டில் இருக்கும்வரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது!