fbpx
Homeபிற செய்திகள்‘டங்ஸ்டன்’ திட்டத்தையே கைவிடுமா மத்திய அரசு?

‘டங்ஸ்டன்’ திட்டத்தையே கைவிடுமா மத்திய அரசு?

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் பெருவாரியான பங்குகள் உரிமையை, தூத்துக்குடி சுற்றுச்சூழலுக்கு அபாயம் விளைவித்ததோடு, துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதற்கும் மூல காரணமாக இருந்த ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனமே கொண்டுள்ளது.

இந்த திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடே ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தது. டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவோடு தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வர் பதவியிலேயே இருக்க மாட்டேன் என்று ஆவேசமாக சட்டப்பேரவையில் பேசி தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார் மு.க.ஸ்டாலின். தனிப்பட்ட முறையில் ஒன்றிய அமைச்சகத்திற்கு கடிதமும் எழுதினார். நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக கண்டித்தனர்.

இந்நிலையில், மதுரை மேலூர் டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய சுரங்க அமைச்சகம். இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டின் போராட்ட உணர்வுகளுக்குக் கிடைத்த பெரும் வெற்றி தான். அதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பல்லுயிர் பாதுகாப்புப் பகுதியைத் தவிர்த்து மீதம் உள்ள பகுதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் எல்லா பகுதிக்கும் நிச்சயம் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். இத்திட்டத்தை முழுமையாக கைவிடுவது மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி, பாதுகாக்கப்பட்ட பகுதியில் வரக்கூடிய சுரங்கத்தை மட்டும் கைவிட்டால் போதாது. இதில் மத்திய அரசு ஏதேனும் சூழ்ச்சி செய்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

எனவே, அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஒட்டுமொத்த திட்டமும் கைவிடப்படுகிறது என மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

அப்போது தான் மக்கள் போராட்டம் ஓயும்!

படிக்க வேண்டும்

spot_img