fbpx
Homeபிற செய்திகள்காவிரி டெல்டா - வேளாண் மண்டலமா? இல்லையா?

காவிரி டெல்டா – வேளாண் மண்டலமா? இல்லையா?

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில், ஒன்றிய அரசுக்கு அந்த முன்மொழிவு முறையாக அனுப்பப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மக்களவையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா, டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ‘அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்தவொரு பரிந்துரையும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை மத்திய அரசால் அறிவிக்க முடியும். எனினும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த முன்மொழிவும் வரவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 2020ம் ஆண்டு பிப்ரவரி 20ந்தேதி அன்று காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவைத் தாக்கல் செய்வது தனக்குப் பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மசோதாவின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன.

தொடர்ந்து, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போதைய அதிமுக அரசு, அதற்கான பரிந்துரையை மத்திய அரசிற்கு முறையாக அனுப்பவில்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த சட்டமே போதுமானது. வேளாண்மை மாநில பட்டியலில் இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மாறுபட்ட கருத்துகளால் காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தற்போது இருக்கிறதா, இல்லையா? அதற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டமே போதுமா? அதற்கான பலன்களை டெல்டா விவசாயிகள் பெற்று பயனடைந்து வருகிறார்களா? சிறப்பு வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டுமா?. அப்படியானால் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை ஏமாற்றினாரா? என்பன போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் உரிய விளக்கத்தை அளித்து டெல்டா விவசாயிகளின் சந்தேகத்தைப் போக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகள் வேளாண் சிறப்பு மண்டலம் தான் என்பதை உறுதிப்படுத்திட வேண்டும் அல்லது அப்படி அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு மீண்டும் முன்னெடுக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img