fbpx
Homeதலையங்கம்‘புத்தகப்பை இல்லா நாட்கள்’: பள்ளிகளில் புதுமை திட்டம்!

‘புத்தகப்பை இல்லா நாட்கள்’: பள்ளிகளில் புதுமை திட்டம்!

பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் கற்பனைத் திறனை அதிகரிக்கும் இடமாகவும், கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் இடமாகவும் இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கிளிப் பிள்ளைகளாக இல்லாமல் புதியன படைக்கும் ஆற்றல் மாணவர்களுக்கு வர வேண்டுமாயின் அவர்கள் மேல் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் என ஒவ்வொரு மாணவரும் கிலோக் கணக்கில் புத்தகப் பைகளை தூக்கிக் கொண்டு பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

மாணவர்களின் மன அழுத்தம் குறைக்க, மாதம் ஒரு நாளாவது புத்தகங்கள் இல்லாமல் பள்ளி சென்று பாடம் கற்று வரும் வகையில் நோ பேக் டே(No Bag Day) திட்டம் உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அமலில் உள்ளது.

அந்த நாட்களில் மாணவர்களுக்கு சமூக மதிப்பீடுகள், உடல் ஆரோக்கியம், போதைபொருள் ஒழிப்பு, போக்குவரத்து விதிகள், கலை இலக்கியம், வினாடி வினா, விளையாட்டு, கைவினைக் கலை என பல்வேறு விஷயங்கள் குறித்து கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் நோ பேக் டே முறையை செயல்படுத்த கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளை நோ பேக் டே ஆக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கேரள மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி ஒருபடி மேலே போய், மாதத்தில் ஒரு நாள் போதாது… நான்கு நாட்கள் நோ பேக் டே திட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

1-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிப் பையின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரையிலும், 10-ம் வகுப்பு மாணவர்களின் பள்ளிப் பையின் எடை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரை இருக்கும் படி வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற திட்டம் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வி பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நோ பேக் டே திட்டம் என்பது தேசிய கல்விக் கொள்கையில் ஒரு அங்கமாக உள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் உள்ளதாக கல்வியாளர்களும், திமுக உள்ளிட்ட கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால் மாநிலக் கல்விக் கொள்கையை தயாரித்து அமல்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அவ்வாறு மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் போது அதில் நோ பேக் டே போன்ற சில முக்கிய திட்டங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று தங்கள் எதிர்பார்ப்பை முன்வைக்கின்றனர் கல்வியாளர்கள். எனவே தமிழ்நாட்டிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுமா? அதற்கான பரிசீலனை மேற்கொள்ளப்படுமா?

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்-!

படிக்க வேண்டும்

spot_img