தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக பென்னாகரம் ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் மேற்பார்வையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மேற்பார்வையில் நடந்த இந்த பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் தலைமை தாங்கினார். பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் கலைச்செல்வி, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக் கப்பட்ட பயிற்சியாளர் இ.பி இன்போவேஸ், பயிற்றுனர் சுபாஷ் ஆகியோர் தெளிவாக பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் ,உணவு பொருள் கெடுவதற்கான காரணிகள் அதனை தவிர்க்கும் வழிமுறைகள், சமைத்த உணவு இருப்பு வைத்தல், பராமரித்தல், பரிமாறுதல் உடன் உணவு மூலப் பொருட்கள் தரம் சோதித்தல், உணவு மாதிரி எடுத்து வைத்தல், முட்டை, காய்கறி உள்ளிட்டவைகளின் கழிவு பொருட்கள் மற்றும் கழிவு நீர் வெளியேற்றம் குறித்தும் ,உணவு பொருள் பாக்கெட்டுகள் காண வேண்டிய அம்சங்களான உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி தயாரிப்பு தேதி, முடிவு தேதி உணவு பாதுகாப்பு உரிம எண் குறித்தும் தெளிவாக உணவுப் பொருட்களைக் கொண்டு செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். செறி ஊட்டப்பட்ட உணவுப் பொருட்களான அரிசி, பால்,சமையல் எண்ணெய், கோதுமை, உப்பு இவற்றை பத்தியும் செறி ஊட்டப்படும் நுண்ணூட்டச் சத்துக்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உணவுப் பொருட்களில் வீட்டளவிலே கலப்படம் கண்டறிதல் குறித்து தேநீர், தேன், நெய், சமையல் எண்ணெய் மற்றும் அயோடின் உப்பு, அயோடின் அல்லாத உப்பு வேறுபாடு குறித்தும் அயோடின் அவசியம் குறித்தும் தெளிவாக நேரடியாக உணவுப் பொருட்களைக் கொண்டு செயல் விளக்கம் அளித்தார். நிகழ்வில் அங்கன்வாடி மையங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரு பிரிவாக பங்கேற்றனர்.



