Homeபிற செய்திகள்ஆயுத பூஜை: நாமக்கல் மாநகரில் ஒரே நாளில் 107 டன் கழிவுகள் அகற்றம்

ஆயுத பூஜை: நாமக்கல் மாநகரில் ஒரே நாளில் 107 டன் கழிவுகள் அகற்றம்

நாமக்கல் மாநகராட்சியில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. இதையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் வெளியேற்றப்பட்ட கழிவுகள், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட வாழை மரங்கள், மாவிலைகள் மற்றும் சாலைகளில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்கள் உள்ளிட்ட கழிவுகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குவிந்து காணப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, மாநகரம் முழுவதும் குவிந்திருந்த கழிவுகளை அகற்றும் பணியில் 503 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 6 டிப்பர் லாரிகள் மற்றும் 30 ஆட்டோக்கள் என மொத்தம் 36 வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் செல்வ பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். மாநகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் குவிந்துள்ள கழிவுகளை அன்றைய தினமே முழுமையாக அகற்ற வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். இதையடுத்து, சுகாதார அலுவலர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணி, செல்வகுமார் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பில் மாநகரம் முழுவதும் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சியில் வழக்கமாக நாள்தோறும் சுமார் 61 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுவது வழக்கம். ஆனால், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து, ஒரே நாளில் மொத்தம் 107 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. சேகரிக்கப்பட்ட குப்பைகள் நாமக்கல் கொசவம்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு மக்கும் குப்பைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அவற்றின் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அரியலூரில் உள்ள சிமெண்ட் உற்பத்தி ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img