Homeபிற செய்திகள்ஏடீடி-59 புதிய ரக நெல் வயல் விழா

ஏடீடி-59 புதிய ரக நெல் வயல் விழா

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், பி.மேட்டுப்பாளையம் அருகே வெங்கமேடு ஜானகி&வெங்கடாசலபதி வயலில் ஏடீடி 59 புதிய ரக நெல் வயல் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குமரகுரு வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் சு.ஹேமலதா தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் பி.பி. ராமசாமி, டி-9 பாசனசபை தலைவர் என்.கே. மாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பயிர் மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர் பெ.பாஸ்கர் வரவேற்றார்.

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.தண்டபாணி பேசியபோது, ஏடீடி 59 குறைந்த வயதுடைய ரகம் என்றும், குறைந்த உரத்தை எடுத்துக் கொண்டு சாயாத தன்மை கொண்டது என்றும் கூறினார். இது டிபிஎஸ் 43 மற்றும் ஏஎஸ்டி 16 ரகங்களுக்கு மாற்றாக இருக்கும். இட்லி மாவுக்கு ஏற்றது. 1 பங்கு உளுந்துக்கு 6 பங்கு அரிசி பயன்படுத்தலாம். முழு அரிசி கிடைக்கும் திறன் 66 சதவீதம்; பாக்டீரியா இலைக்கருகல், குலை நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் உண்டு. அரிசியில் துத்தநாகச் சத்து 19.4 மில்லி கிராம் உள்ளது.

விவசாயிகள் இந்த ரகம் குறித்த அனுபவக் கருத்துகளை ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், வாய்ப்பு கிடைக்கும்போது ஆராய்ச்சி நிலையம் மற்றும் பண்ணைகளை நேரில் பார்வையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத் தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணை வேளாண்மை இயக்குநர் ஆர்.சிவக்குமார், உதவி வேளாண்மை இயக்குநர் ஜீவதயாளன், கல்லூரி செயல் அலுவலர் அ.பாலசுப்பிரமணியம், வேளாண்மை அலுவலர் சிவபிரகாசம், ஆத்மா திட்ட அலுவலர் திருவரங்கராஜ், மாவட்ட உழவர் விவாதக்குழு தலைவர் சி.எம்.நஞ்சப்பன், செயலாளர் பா.மா. வெங்கடாசலபதி, நாட்டுச் சர்க்கரை உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஏ.எம்.பாலசுப்பிரமணியம், உழவர் விவாதக்குழு அமைப்பாளர் கே.ஏ. பழனிசாமி, இயற்கை விவசாயி பா.கு. சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். கோபி, பவானி வட்டாரங்களைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை குமரகுரு வேளாண்மை கல்லூரி, மாவட்ட உழவர் விவாதக்குழு மற்றும் கோபி வட்டார வேளாண்மைத் துறை இணைந்து நடத்தின. இறுதியில் உழவியல் துறைப் பேராசிரியர் முனைவர் எஸ். செல்வகுமார் நன்றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img