கோவையில் நடைபெற்ற அஸ்மிதா சிட்டி லீக் சைக்கிள் பந்தயத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.
மத்திய அரசின் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக மாணவிகள் மற்றும் சிறுமிகளிடையே சைக்கிளிங் போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களது திறமைகளை கண்டறிந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தவும், அஸ்மிதா சிட்டி லீக் என்ற சைக்கிளிங் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவை ஆகிய நகரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் சென்னையில் போட்டிகள் நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து கோவையில் இந்த போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியை மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர் கொடி அசைத்து துவங்கி வைத்தார். இந்த போட்டியில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு 20 கிலோமீட்டர் தூரத்திற்கும், எலைட் பிரிவில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கும் சைக்கிளிங் போட்டிகள் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக சைக்கிளிங் கூட்டமைப்பின் செயலாளர் விக்னேஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட சைக்கிளிங் கூட்டமைப்பின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும் போது, நாடு முழுவதும் மத்திய அரசின் முன்னெடுப்பில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் வெற்றி பெறும் மாணவிகள் அடுத்த கட்டமாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தனர்.

மேலும் இதுவரை 124 பதக்கங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் வென்றுள்ளதாகவும், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் மாணவிகள் மற்றும் சிறுமிகள் இடையே சைக்கிளின் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாலம் பாஷா, மதுக்கரை நகர செயலாளர் ராம்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சைக்கிளிங் திறமைகளை வெளிப்படுத்தினர்.



