பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதையே தனது உத்தியாக கடைபிடித்து வருகிறார். ஐ.பி.எஸ் வரை படித்து பட்டம் பெற்ற அவர், தான் பேசுவதில் துளியும் உண்மை இல்லை என்பதை தெரிந்தும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி, ஊடகங்களில் பிரபலமானார்.
அடுத்தடுத்து ஆபாச வீடியோ, ஆடியோ பாலியல் சர்ச்சை புகார்களில், பாஜகவில் இருந்த பலரும் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் மீது சமீபத்தில் அண்ணாமலை நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சொந்த கட்சி பெண்களுக்கே கட்சியில் உள்ளவர்களால் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் காய்த்ரி ரகுராம்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அண்ணாமலையிடம் ரபேல் வாட்ச் பில், காயத்ரி ரகுராம் கூறிய குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
அப்போது அதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல், நிதானமிழந்து செய்தியாளர்களிடம் அவர்களின் ஊடகங்களின் பெயரைக் கேட்டு மிரட்டும் தொணியில் அண்ணாமலை பேசியதை ஊடகங்களின் நேரலையில் கண்டபோது அதிர்ச்சியாக இருந்தது. பத்திரிக்கையாளரை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசி ஊடகங்களை இழிவுப்படுத்தும் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
செய்தியாளரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த அண்ணாமலை, கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து செய்தியாளரின் கேள்விக்கு நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள், எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் செய்தி சேகரிக்கும் பணி குறித்து அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல. இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை, மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசியலில் வளர்ந்து வரும் அண்ணாமலை ஊடகங்களின் உரிமையை, உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வதையே தொடர் வாடிக்கையாக அண்ணாமலை கொண்டிருப்பது ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு ஏற்புடையதல்ல.
எனவே நேற்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டமைக்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேட்காவிட்டாலும் இனி வருங்காலங்களிலாவது மோதல் போக்கை கைவிட வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களின் இறுதி வேண்டுதல்; எச்சரிக்கை!



