fbpx
Homeதலையங்கம்அதானி விவகாரம்: ஆர்பிஐ நடவடிக்கை?

அதானி விவகாரம்: ஆர்பிஐ நடவடிக்கை?

நியூயார்க் நகரில் இருந்து செயல்படும் நிறுவனம் தான் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், ‘ஷார்ட் செல்லர்’ என்றழைக்கப்படும் இந்நிறுவனம் தன்னிடம் இல்லாத விலை குறைந்த பங்குகளை தரகர்கள் மூலம் வாங்கி விற்று லாபம் ஈட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, அதானி குழுமத்தையே புரட்டிப்போட்டு விட்டது. இதன்மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்த அதானி, இரண்டே நாளில் ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது என்பதே ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு. இதனை அதானி குழுமம் மறுத்து இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என விளக்கம் அளித்தது.

அதற்கு பதில் அளித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், ‘சரியான பதிலை அதானி குழுமம் தரவில்லை. அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும்; சந்திக்கத் தயார்’ என சவால் விடுத்தது.

இரு தரப்புக்குமிடையே வார்த்தை போர் நீடித்து வரும் நிலையில், அதானி குழுமத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அதி முக்கியமாக அதானி குழுமத்திற்கு 7 நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. சுமார் ரூ.5.56 லட்சம் கோடி அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதானியின் சொத்து மதிப்பு ரூ.1.85 லட்சம் குறைந்து ரூ.7.84 லட்சம் கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்திய நிதிச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் எல்ஐசி, எஸ்பிஐ ஆகிய இரண்டுமே அதானி குழுமத்தில் பெருமளவில் முதலீடு செய்துள்ளன.

அதானி குழும பங்குகள் வீழ்ச்சியால் எல்ஐசி நிறுவனம் இரண்டே நாளில் ரூ.16,580 கோடியை இழந்துள்ளது. எஸ்பிஐக்கும் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ‘நாட்டின் ஸ்திரத் தன்மைக்கே ஆபத்து’ என காங்கிரஸ் விமர்சித்து இருக்கிறது.

இரு நிறுவனங்களிலும் தங்கள் சேமிப்பை வைத்திருக்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை சிதைத்து விடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எச்சரித்துள்ளது. ஆக, அதானி குழுமத்தை சந்தேக மேகங்கள் சூழ்ந்துள்ளன.

அதானிக்கு நேரம் சரியில்லை போலும். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உண்மையா? பொய்யா? எந்த அளவுக்கு உண்மை? என்ற பெரிய கேள்வி நாட்டு மக்களின் கண்முன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அதே நேரத்தில் அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயான நட்பு குறித்தும் அலசப்படுகிறது.

நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் இப்பிரச்சினை குறித்து பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி அமைப்போ, இந்திய ரிசர்வ் வங்கியோ இதுவரை வாய் திறக்கவில்லை. இவற்றின் வாய் எப்போது திறக்கும்? எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்னென்ன? என்பது தான் முக்கிய எதிர்பார்ப்பாக மாறி இருக்கிறது.

அதானி குழுமத்துக்கு என்ன பாதிப்பு? அதன் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்பதை விட, இந்த விவகாரத்தில் எது நடந்திருந்தாலும் உண்மை வெளிச்சத்துக்கு வரவேண்டும்.

மோசடி நடந்திருந்தால் கடும் நடவடிக்கை பாய வேண்டும். இல்லையென்றால் இந்தியா மீதான உலக நாடுகளின் சந்தேகம் நீக்கப்பட வேண்டும். செபியும் ரிசர்வ் வங்கியும் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?

பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img