கேப்டன் என ரசிகர்களாலும், பொது மக்களாலும் பேரன்போடு அழைக்கப்பட்ட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமாகி விட்டார். ரஜினி, கமல் என இருபெரும் ஜாம்பவான்கள் கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ் திரையுலகில் அவர்களுக்கு இணையாக தனது இயல்பான அதே சமயம் அதிரடியான நடிப்பால் கிராமப்புற இளைஞர்களை கட்டிப்போட்டவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் என்றாலே மனித நேயம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பலருக்கும் பல விதமான உதவிகளை செய்தவர். பல்வேறு கனவுகளோடு சென்னை வந்து பசியிலும் பட்டினியிலும் கிடக்கும் இளைஞர்களுக்கு விஜயகாந்த் அலுவலகம் சொர்க்கலோகம் என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு மூன்று வேளையும் விஜயகாந்த் அலுவலகத்தில் சுடச் சுட உணவு பரிமாறப்படும். தான் ஒரு புகழ் பெற்ற நடிகர் என்றாலும் எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாகவே இருந்தார் விஜயகாந்த்.
1999ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்றார். அதுவரை கடனில் மூழ்கிக் கிடந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
ரஜினி, கமல் உள்பட பிரபல நடிகர்கள் அனைவரையும் மலேசியா அழைத்துச் சென்று நட்சத்திர கலை விழா நடத்தி அதில் திரட்டிய நிதி மூலம் நடிகர் சங்க கடனை அடைத்தார்.
நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட வேண்டும் என்பதுதான் அவருடைய கனவாக இருந்தது. எனினும், தேமுதிகவை ஆரம்பித்ததால் நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். விஜயகாந்த் தலைவராக இருந்த காலம்தான் நடிகர்கள் சங்கத்தின் பொற்காலம் என்று இன்றளவும் புகழப்படுகிறது.
அந்த மாமனிதன் மறைந்து விட்ட நிலையில் நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இப்போது நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டி வருகிறார்கள் என்றால் அதற்கு முழு காரணம் கேப்டன் விஜயகாந்த்தான்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட உடன் அதற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும். ஏனெனில் நடிகர் சங்கம் இருப்பதற்கு காரணமே விஜயகாந்த்தான் என்று பிரபல சண்டை கலைஞரான ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளார்.
ரசிகர்களும் சோகத்தோடு இந்த கோரிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். நாசர், விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாமும் முன்வைப்போம். பேரோடும் புகழோடும் வாழ்ந்து மறைந்தவருக்கு பெயர் சூட்டிப் பெருமை கொள்வோம்.
அதோடு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், மதுரையில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, அரசியலிலும், சினிமாவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்துக்கு மாமதுரையில் முழு உருவச் சிலை அமைத்து நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவும் நல்ல கோரிக்கை தான். இதனை மேயர் பரிசீலித்து விஜயகாந்துக்கு சிலை அமைப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதுவும் நடக்கட்டும்.
கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக!



