fbpx
Homeபிற செய்திகள்கல்வி வளர்ச்சியில் தமிழ்நாட்டின் சாதனைகள்!

கல்வி வளர்ச்சியில் தமிழ்நாட்டின் சாதனைகள்!

மத்திய கல்வி அமைச்சகம், 2024ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

சென்னை ஐ.ஐ.டி, இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடம் பெற்று, தனி சாதனையையும் படைத்துள்ளது சென்னை ஐ.ஐ.டி.
மேலும், உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலிலும் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

முதல் 50 அரசு பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழ்நாடு அரசின், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் ஆகிய 10 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

அதிலும், இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன. கோவையின் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 7ஆவது இடமும், சென்னை லயோலா கல்லூரி 8ஆவது இடமும், கோவை பிஎஸ்ஜி கல்லூரி 11ஆவது இடமும், சென்னை பிரசிடென்சி கல்லூரி 13ஆவது இடமும், சென்னை கிறித்தவக் கல்லூரி 14ஆவது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய கல்விக் கொள்கை வேண்டுமா? வேண்டாமா? என்ற தர்க்கம் ஒருபுறமிருந்தாலும் தனக்கென ஒரு கல்விக் கொள்கையை முன்னெடுத்து அதன் மூலம் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு, தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்பதற்கு ஓர் உதாரணம் தான் இந்த தரவரிசைப் பட்டியல்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தையில் உதித்த நான் முதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையும் யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் முதலிடம் வகிக்கும் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில், தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்வதும் குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது.

மகாகவி பாரதியார், செந்தமிழ் நாடெனும் போதினிலே... என்ற பாடலில் கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமான சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு என்று கூறியதை இந்த நேரத்தில் நினைவு கூர்வது தான் பொருத்தமாக இருக்கும்.

கல்வி வளர்ச்சியில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை, தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை அல்லவா?

படிக்க வேண்டும்

spot_img