fbpx
Homeதலையங்கம்உலக நாடுகளின் கவனம் ஈர்க்கும் அதிபர் புதினின் இந்திய வருகை!

உலக நாடுகளின் கவனம் ஈர்க்கும் அதிபர் புதினின் இந்திய வருகை!

வல்லரசான ரஷ்யாவும் உலகின் சக்திவாய்ந்த நாடான இந்தியாவும் காலங்காலமாக நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். கடைசியாக 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்கு புதின் வந்திருந்தார். சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் புதின் மீண்டும் இந்தியா வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இன்று மாலை டெல்லி வரும் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி வரவேற்று இரவு விருந்து அளிக்கிறார். அதன்பின் நாளை நடக்கும் 23வது இந்தியா &- ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் இரு நாட்டின் தலைவர்களும், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே டெல்லிக்கு புதின் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், ரஷ்ய நாடாளுமன்றம் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ரெலோஸ் எனப் பெயரிடப்பட்ட ராணுவத் தளங்களை இருநாடுகளும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இரு நாட்டு ராணுவப் படைகளும் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளியை எந்தவித தடையுமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வரும் நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை அணுகியுள்ளன. உக்ரைன் உடனான போர் தொடங்கியபின், புதின் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

போரை முடிவுக்குக் கொண்டுவர புதினை அணுகுமாறு இந்திய அரசுக்கு தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாக பல ஐரோப்பிய தூதர்களும் தெரிவித்துள்ளனர். இப்போரை தங்களின் இருப்புக்கும், ஐரோப்பிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இந்த நாடுகள் கருதுகின்றன.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்துள்ளார். இந்த நிலையில் நடைபெற உள்ள புதின் -& மோடி இடையிலான பேச்சுவார்த்தைகள் சர்வதேச அளவில் கவனிக்கப்படும். மேலும், உக்ரைன் போர் தொடங்கிய 2022 முதல் மோடி &- புதின் இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. மொத்தம் 16 முறை இரு நாடுகளின் தலைவர்களும் பேசி இருக்கின்றனர்.

அதிபர் புதின் வருகையால் ரஷ்யா – இந்தியா இடையேயான நல்லறவு வலுப்பெறும் என்பதிலும் உலக நாடுகள் எதிர்பார்ப்பது போல உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் மோடி மீண்டும் புதினுடன் பேசுவார் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை.

அதிபர் புதினை வரவேற்போம். நல்லதே நடக்கும் என நம்புவோம்!

படிக்க வேண்டும்

spot_img