fbpx
Homeபிற செய்திகள்தீண்டாமைக்கு சம்மட்டி அடி கொடுத்த நீதிமன்றத் தீர்ப்பு!

தீண்டாமைக்கு சம்மட்டி அடி கொடுத்த நீதிமன்றத் தீர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூர் அருகே குட்டகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பணிமாறுதலில் வந்த அருந்தியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் என்ற பெண்மணியை, கடந்த 2018-ம் ஆண்டு ஊரில் இருந்த ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர், ‘தலித் பெண் சமைக்கக் கூடாது’ என பிரச்சினை செய்தனர். இதையடுத்து பெண் சமையலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அரசுப் பள்ளி சமையலரை சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியும், பணி செய்ய விடாமல் தடுத்ததால் இச்சம்பவம் தமிழக அளவில் பரபரப்பானது. இது தொடர்பாக பாப்பாள் அளித்த வன்கொடுமை புகார் தொடர்பாக சேவூர் போலீஸார் 36 பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில் குற்றவாளியாகக் சேர்க்கப்பட்டிருந்த அன்றைய வட்ட வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தடையாணை பெற்றிருந்தார்.

அதன்படி உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின்படி, மீனாட்சி விடுவிக்கப்பட்டார். 4 பேர் இறந்துவிட்டனர். 31 பேர் மீது வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி எம்.சுரேஷ் நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் 31 பேர் கொண்ட இந்த வழக்கில் 25 பேர் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து பழனிச்சாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகிய 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பை ஒட்டி சமையலர் பாப்பாள் மற்றும் அவரது கணவர் பழனிசாமி ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தாமதமாக தீர்ப்பு கிடைத்திருந்தாலும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பட்டியலின சமூக மக்களுக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது. சட்டம் அனைவருக்கும் சமம் தான் என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது.

அவமானப்படுத்தப்பட்ட பாப்பாளுக்கு ஆதரவாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பாண்டியன், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், வழக்கறிஞர் சையத் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவும் ஆதரவாக விடாமுயற்சியுடன் கடந்த 7 ஆண்டுகளாக வழக்கை நடத்திச் சாதித்தது பாராட்டத்தக்கது.

என்ன தான் அறிவியலும் சமூக சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று உரிமை பேசினாலும் நாட்டில் இன்னமும் தீண்டாமை இருக்கத் தான் செய்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆங்காங்கே கிராமப்புறங்களில் இன்றைக்கும் அதனை காண முடிகிறது. முன்புபோல இல்லை என்றாலும் முற்றிலுமாக அறுத்தெறியப்படவில்லை. பட்டியலினத்தவரின் உரிமைக் குரலை இப்போது அதிகமாக கேட்கமுடிகிறது.

ஆக, திருப்பூர் தீர்ப்பு சாதிய மனோபாவத்தோடு பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படுகிற தீண்டாமை வன்கொடுமைகளை நிகழ்த்துபவர்கள் மீதான சம்மட்டி அடியாகும். தீண்டாமை வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

படிக்க வேண்டும்

spot_img