கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மூலிகை தோட்டங்கள், நீரூற்றுக்கள், மலை குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள் சிறுவர்கள் விளையாடும் பகுதிகள், என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.
இதன் திறப்பு விழா மற்றும் ஏற்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டார். அப்போது அவருடன் தி.மு.க மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, கலெக்டர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.
செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வரும் ஒவ்வொரு பகுதியாக சென்று அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் அதிகாரிகள் ஒவ்வொரு பணிகளாக விளக்கிக் கூறினர். அவர்களிடம் பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்கும்படி அமைச்சர் கே. என் நேரு உத்தரவிட்டார்.
அதன் பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, செம்மொழி பூங்காவை வருகிற 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
அதன் பிறகு அவர் செம்மொழி பூங்காவில் உள்ள மூலிகை தோட்டங்கள் உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிடுகிறார். மேலும் பூங்காவை திறந்து வைத்ததும் பள்ளி மாணவ – மாணவிகள் மத்தியில் அவர் கலந்துரையாடுகிறார்
பூங்கா 45 ஏக்கரில் அமைக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் திறந்து வைத்ததும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்படும். டிசம்பர் 1 முதல் அனுமதிக்கபடலாம். மழை பெய்தாலும் திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் பூங்கா திறக்கப்படும், என்றார்.



