fbpx
Homeபிற செய்திகள்உச்ச நீதிமன்ற தீர்ப்பு யாருக்கு சாதகம்?

உச்ச நீதிமன்ற தீர்ப்பு யாருக்கு சாதகம்?

மாநில அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் குறித்து மூன்று மாதங்களுக்குள் அவர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் காலக்கெடு நிர்ணயித்தது.


இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.


இதில் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கோ அல்லது மறுபரிசீலனைக்காக நிறுத்தி வைத்துத் திருப்பி அனுப்புவதற்கோ ஆளுநர் விருப்புரிமையைப் பயன்படுத்தலாம். ஒரு மசோதா நிலுவையில் இருந்தால் அதற்கு நீதிமன்றமே ஒப்புதல் அளிக்க முடியாது.

ஆளுநருக்கு மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுங்கள் என உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தல் கொடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இவை ஆளுநர் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு அம்சங்கள்.


அதே நேரத்தில் தீர்ப்பில் மாநில அரசுகளுக்கு சாதகமான அம்சங்களும் இருக்கின்றன.
“மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் ஆளுநர்கள் இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள கூடாது.


காரணம் எதுவும் கூறாமல் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் இரு நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக்கூடாது.

மாநில மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும் அமைச்சரவையுமே முடிவு செய்யும் இடத்தில் இருக்கும்.
அமைச்சரவை அனுப்பும் மசோதாவை ஏற்பதுதான் ஆளுநரின் முதல் வாய்ப்பு. அரசியல் சாசன அமர்வுப்படி ஆளுநருக்கு மூன்றே வாய்ப்புகள்தான் இருக்கிறது. ஒன்றிய அரசு கூறுவதுபோல ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் நான்காவது வாய்ப்பு கிடையாது.


வேறுபாடுகளை தீர்க்க மாநில அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆளுநர் செயல்படாமல் இருந்தால் அரசியல் அமைப்பு, நீதிமன்றங்கள் அதனை ஆய்வு செய்யும். பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்” என கூறியுள்ளது.


தமிழ்நாடு ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த வழக்கு. அதாவது மசோதாக்களை பல மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு கெடு விதிக்க முடியாது என்றால் அவர் பழைய படியே மாநில அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் மசோதாக்களை கிடப்பில் போடத் தொடங்கினால் என்ன செய்வது? என்பதே தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் விஸ்வரூப கேள்வி.


ஆளுநர் காலதாமதம் ஏற்பட்டால், நீதிமன்றத்தை நாட மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது. காலக்கெடுவுக்குள் முடிவெடுக்கும் முறை எது என்பதை தீர்மானிக்கப்போவது யார்?. அது ஆளுநர் மட்டுமே என்றால் அது ஒருதலைப்பட்சமாக அமைவதற்கு வாய்ப்பைத் தருமல்லவா?


ஒரு மாநில அரசின் பதவி காலம் ஐந்தாண்டுகள். இதில் ஒரு மசோதா மீது முடிவெடுக்க பல மாதங்களை ஆளுநர் எடுத்துக் கொண்டால் மாநில அரசின் நிர்வாகம் எப்படி சீராக நடக்கும்? ஆளுநர் எத்தனை மாதம் மசோதாவை தன்வசம் வைத்திருக்கலாம் என்ற காலவரையறை நிர்ணயிக்கப்படாத நிலையில், காலதாமதம் செய்யும்போது நியாயம் கேட்டு ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படுமே. இது காலதாமதத்தை இன்னும் நீட்டிக்கத் தானே செய்யும்?.


அதனால் தான் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்!

படிக்க வேண்டும்

spot_img