fbpx
Homeபிற செய்திகள்மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண்போம்!

மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண்போம்!

அனைத்து மாநகரங்களிலும் குப்பைகளை அகற்றுவது என்பது சவாலான காரியமாக இருக்கிறது. இந்தப் பிரச்சனை எல்லா உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெரும் தலைவலியாகத் தான் இருந்து வருகிறது. சில மாநகரங்களில் அது விஸ்வரூபம் எடுத்து அதிகாரிகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பெரும் துன்பம் தருவதாக உள்ளது.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என இருவேறாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தினாலும் பலரும் அதனைப் பொருட்படுத்துவதே இல்லை. 5 சதவீத மக்கள் கூட அதனைப் பின்பற்றுவதில்லை. தூய்மைப் பணியாளர்கள் என்ன தான் சொன்னாலும் பெரும்பாலானோர் செவி மடுப்பதே இல்லை.

வீதிதோறும் வீடு வீடாக வரும் தூய்மைப் பணியாளர்களிடம் குப்பைகளை வழங்காமல் பொது இடத்தில் வீசிச் செல்லும் போக்கு தான் அதிகரித்து காணப்படுகிறது. தூய்மைப் பணியாளர்கள் சென்றபின், தரம் பிரிக்காத குப்பையை சாலையோரம் வீசிச் செல்கின்றனர்.

சிலர் குப்பைகளை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் டூவீலர்களில் வெளியே செல்லும்போது வழியில் சாலையோரம் வீசுகின்றனர். கார்களில் செல்வோர் கூட இப்படிச் செய்வதை பெருநகரங்களில் காண முடிகிறது.

நாட்பட்ட குப்பைகள் சேகரத்தால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதோடு நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. பிரித்து தரப்படாத குப்பைகளை கையாளும் தூய்மைப் பணியாளர்களின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கிறது. தரம் பிரிக்காமல் தரப்படும் குப்பைகள் தான் இப்பிரச்னைக்கே மூல காரணமாக உள்ளது.

இந்த சூழலில் வாகனங்களில் இருந்தபடி குப்பையை வீசினாலோ எச்சில் துப்பினாலோ ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரு.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் ஒருபடி மேலே போய் புதிய யுக்தியை முன்னெடுத்துள்ளது. அந்நகரின் பிரதான சாலைகள்கூட குப்பை மேடாகக் காட்சி அளிக்கின்றன. குப்பைகளை வீசுவோரைத் தங்கள் கைப்பேசியில் காணொளி எடுத்து ‘வாட்ஸ்அப்’ செயலி மூலம் அனுப்புவோருக்கு ரூ.250 சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

குப்பை வீசும் நபரைக் கண்டறிந்து அவர்களுக்கு 1,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் உத்தரபிரதேசம், கர்நாடக அரசுகள் காட்டும் அக்கறை பாராட்டுக்குரியது.

அதே போல தமிழ்நாட்டிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தினமும் 16,563 டன் வெளியேற்றப்படுகிறது. இதில் 7260 டன் குப்பைகள் குப்பைக் கிடங்குகளில் சேகரமாகிறது. மாநிலம் தழுவிய இயக்கமாக தூய்மைத் திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொது இடங்களிலும் நீர்நிலைகளிலும் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநராட்சி கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. கோவை மாநகராட்சி கூட சில நடவடிக்கைகளை முன்னெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது. ஆனாலும் சாலையோரங்களில் குப்பைகள் குவிகின்றன.

சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு கழிவு மேலாண்மை குறித்து மக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், ஆடவர், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தீவிரமாக களமிறங்க வேண்டும்.

வீதிக்கு ஒருவரைக்கூட அக்குழுவில் இணைத்துக் கொள்ளலாம். அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையோடு இருந்து விடாமல் அந்த நடவடிக்கையை தொய்வின்றி தொடர வேண்டும். தரம் பிரிக்காமல் குப்பையை வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

ஆனாலும் பொதுமக்களின் குறிப்பாக தாய்மார்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். அரசின் நிர்வாகமும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் தீர்வு கிடைக்கும். இது என்ன முடியாத காரியமா என்ன?

மக்கும் குப்பை, மக்காத குப்பை என இனியாவது பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க உறுதியேற்போம்!

படிக்க வேண்டும்

spot_img