தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை (SIR) இந்திய தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான குமரகுருபரன் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு ஆதரவாக பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்தார்.
அதிமுக சார்பில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள் ஆர்.ராஜேஷ், தி.நகர் சத்யா ஆகியோர் வாக்காளர் பட்டியலை முறையாக சீரமைக்க வேண்டும் என பட்டும் படாமலும் பேசி மறைமுகமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனால் பிற அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வாக்காளர் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில் இது தேவையற்ற வேலை. போதிய அவகாசம் தந்து திருத்தம் செய்யலாமே என்பது தான் அனைத்து கட்சிகளின் குரலாக ஒலித்தது. சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களையும் குறி வைக்கும் தாக்குதல் இது என்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இப்படி எதிர்ப்பதற்கு என்ன காரணம்? வாக்குச்சாவடிகளில் மோசமான ஓர் அம்சமாக கள்ள ஓட்டு போடுவது தொடர்ந்து வந்த நிலையில் அதற்கு மாற்றாக இப்போது ‘‘ஓட்டுத் திருட்டு’’ என்ற புதிய சொல் நம் நாட்டுத் தேர்தல் அகராதியில் இடம்பெற்று வருகிறது. பீகாரில் இருவாரங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 65 லட்சம் வாக்காளர்களை அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையம் நீக்கியது. இதுகுறித்து பீகாரில் ஓர் எதிர்ப்புப் புயல் வீசியது.
போதிய கால அவகாசம் தராமல் அவசர கோலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமென்ன? – தேர்தல் ஆணையத்தின் அவசரத்தை பார்க்கும்போது அதனை பின்னால் இருந்து பாஜக இயக்குகிறதோ என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில், 2026 இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலைத் தீவிர முறையில் மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் இறங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியினரும் ஜனநாயகத்தின் மாண்பைப் போற்றுவோரும் மிகவும் விழிப்போடு விரைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட முனைந்திருப்பது மிகமிக முக்கியமானதொன்றாகும்.
அதற்கான முதல் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவில், 2.11.2025 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
‘வாக்குத் திருட்டு’ என்ற புதிய முறையைச் சற்றும் தமிழ்நாட்டில் நடைபெற விடமாட்டோம் என்பதைக் கண்காணிக்கும் பல முக்கியத் தடுப்பு முறைகளை அக்கூட்டத்தில் விவாதித்து, சிறப்பான செயற்பாடுகளை வகுப்பது மிகவும் இன்றியமையாததாகும். மக்கள் ஓட்டுரிமையைத் திருட்டுக் கொடுக்காமல், ஏமாந்து விடாமல் இருக்க வேண்டும். அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் முக்கியமாக எடுத்தாக வேண்டும்.
அதனால் தான் மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணியும் SIR செயல்பாட்டை விழிப்போடு கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் எல்லாரும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கையோடு அறிவுறுத்தி உள்ளார்.
வருமுன் காக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த அபாய மணியை ஒலித்திருக்கிறார். அதன் ஓசை தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பரவி மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்.
எனவே, கவனமுடன் செயல்பட்டு நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை ஒவ்வொருவரும் தவறாமல் உறுதி செய்திட வேண்டும். யாருடைய ஓட்டும் திருட்டு போய்விடக் கூடாது. தகுதியுள்ள யார் பெயரும் விடுபட்டு விடக்கூடாது!



