இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து வருகின்றன. மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்துவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியை முறியடிக்கும் அனைத்து வழிகளையும் கையாண்டு வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அவர் உறுதிபட தெரிவித்து விட்டார். தமிழ்நாட்டு மக்களின் எண்ண ஓட்டமும் அது தான்.
அதிமுக, பாமக, தவெக, தேமுதிக, அமமுக, நாதக என எந்தக் கட்சியாக இருந்தாலும் மும்மொழிக் கொள்கையை ஆதரித்தால் தமிழ்நாட்டு அரசியலில் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள் என்பது திண்ணம். தமிழக பாஜகவுக்கு ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும் அடக்கித் தான் வாசித்து வருகின்றனர்.
இப்போது தமிழ்நாட்டைப் பின்பற்றி மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அங்கு பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா அரசு, மும்மொழி கொள்கையை சமீபத்தில் ஏற்றுக்கொண்டது.
மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தி கற்பிக்கப்படும் என்று அம்மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. மராத்தி மற்றும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிக் கூடங்களில் 1 ஆம் வகுப்பு முதல் மூன்றாவது பொதுவான மொழியாக இந்தி கற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது இந்தி மொழியை திணிக்கும் முயற்சி என்று கூறி எதிர்க்கட்சிகளும் மராத்தி மொழி அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசின் முடிவுக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 1 ஆம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக் கொடுக்கப்படும் என்ற முடிவுக்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இருவரும் இணைந்து ஜூலை 5 ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்துவதாக அறிவித்தனர். இதேபோல அடுத்தடுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் சிவசேனா அறிவித்தது.
இதனால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பின்வாங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு. மகாராஷ்டிராவில் இந்தியை 3வது மொழியாக கற்பிக்கும் தீர்மானத்தை ரத்து செய்துள்ளார் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இது மும்மொழிக் கொள்கைக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் வரும் ஜூலை 5 ஆம் தேதி நடைபெற இருந்த பேரணி வாபஸ் பெறப்பட்டுள்ளது. மும்மொழிக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த குரல் இன்று மகாராஷ்டிரா வரை சென்றுள்ளது. இது தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி என்றால் மிகையல்ல!



