fbpx
Homeதலையங்கம்நீண்டகாலம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்!

நீண்டகாலம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இது, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் நீண்டகாலம் நடக்கக்கூடிய இரண்டாவது தேர்தல் என்று பதிவாகி உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1951-52ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் காலம் நான்கு மாதங்களுக்கு நீடித்தது. அதன் பின்னர், அது சுருக்கப்பட்டு நாடு முழுவதும் ஒருசில நாள்களில் வாக்குப்பதிவை முடிக்கும் வகையில் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று வந்தது.

குறிப்பாக, 1980ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வெறும் நான்கு நாள்களிலேயே முடிந்துவிட்டது. இந்திய வரலாற்றில் குறைந்த காலத்தில் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தல் அது தான்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 44 நாள்களுக்கு நீடிப்பதோடு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 83 நாள்கள் நீடிப்பதும் ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், வாக்குச்சீட்டு முறை நடப்பில் இருந்தபோது இதைவிடக் குறைவான நாள்களில் தேர்தல்கள் நடைபெற்றன. இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து விட்டதால் வாக்காளர்கள் வாக்களிப்பது சுலபம். வாக்குகளை எண்ணி அறிவிப்பதும் மிக மிக எளிது.

அப்படி இருக்க தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியுள்ள இந்த காலக்கட்டத்தில் 7 கட்டத் தேர்தல் அவசியமா? தேர்தல் முடிவுக்காக ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

பிப்ரவரி 16 (சனிக்கிழமை) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வந்துவிட்டன. ஜூன் 6ஆம் தேதி வரை அவை அமலில் இருக்கும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது ஒன்றிய அரசோ, மாநில அரசுகளோ எந்தவொரு பெரிய திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. நாட்டு மக்களுக்கு எந்தச் சலுகைகளையும் வழங்க முடியாது.

தற்போது 83 நாட்கள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கப் போவதால் அரசுகளின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டு அரசு இயந்திரம் முடங்கும் நிலை ஏற்படாதா? இதுவும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.

நாடு முழுவதும் 3 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க முடியும். கடந்த காலங்களில் நாடு முழுவதும் ஒரே நாளில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தியது இந்திய தேர்தல் ஆணையம். அதற்கான உள்கட்டமைப்புகளும் உள்ளன.

அப்படியிருக்க, தமிழ்நாட்டில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையே சுமார் 45 நாட்கள் கால இடைவெளி உள்ளது. இவ்வளவு இடைவெளி ஏன்?. இதில் ஏதோ அரசியல் தலையீடு இருக்கிறதோ? என்ற சந்தேகமும் அரசியல் கட்சித் தலைவர்களால் எழுப்பப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி, நேற்றையதினம் தனது யாத்திரை நிறைவு விழாவில் பேசும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இல்லாமல் பிரதமர் மோடியால் வெற்றி பெற முடியாது` என குற்றம்சாட்டியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அரசியல் கட்சிகள் ஜெயிக்கலாம் & தோற்கலாம்.

ஆனால் தேர்தல் நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடந்தேற வேண்டும். தில்லுமுல்லு எதுவும் நடந்து விடக்கூடாது. அப்படி நடத்திக் காட்டுவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை ஆகும்.

மக்களாட்சி தத்துவம் ஒருபோதும் தோற்றுவிடக்கூடாது!

படிக்க வேண்டும்

spot_img