fbpx
Homeதலையங்கம்சிறுபான்மையினர் கல்விக்கு வேட்டு வைக்கும் பாஜக

சிறுபான்மையினர் கல்விக்கு வேட்டு வைக்கும் பாஜக

இந்தியாவில் மக்கள் தொகை விழுக்காட்டிற்கும்; சாதி மற்றும் மதம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இதன் மூலம், சிறுபான்மையினரில் பெரும் பகுதி மக்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

இந்நிலையில், இருக்கின்ற ஒதுக்கீடு வேறுபாட்டை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, பாஜக.

இந்திய ஆட்சி முறையில்SC, ST, OBC, EWS மற்றும் GENERAL ஆகியப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு வரையறைப்படி, SC – 15%, ST – 7.5%, OBC – 27%, EWS – 10%, மாற்றுத்திறனாளிகள் – 4% மற்றும் GENERAL- 36.5% என்ற கல்விநிலை இட ஒதுக்கீடும், அரசு வேலைகளில் பொதுப்பிரிவில் (GENERAL) 36.5% க்கும் அதிகமான இட ஒதுக்கீடும் செய்து வருகிறது ஒன்றிய அரசு.

ஆனால், மக்கள் தொகை கணக்கீட்டின்படி, OBC யின் கீழ் வாழும் மக்களே அதிபெரும்பான்மை பெற்றவர்களாக இருக்கின்றனர். உயர்சாதியினரில் மக்கள் தொகை 20% க்கும் குறைந்த அளவே உள்ளது.

இவ்வாறாக சரியான கணக்கீடின்றி பகிரப்படும் இடஒதுக்கீட்டின் மூலம், சிறுபான்மை சமூகத்தினரான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு, அவர்தம் மக்கள்தொகைக்கேற்ப இடங்கள் ஒதுக்கப்படுவது இல்லை.

இதனால், பலருக்கும் கல்வி கிடைக்கப்பெறாத, அரசு வேலைகள் கிடைக்கப்பெறாத நிலை நீண்ட காலமாக நீடித்துவருகிறது. எனினும், அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டினை ஒழுங்குபடுத்த அதிகாரமற்ற நிலையில், கல்வி நிலையங்களில் மட்டுமாவது தங்களுக்கான கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும் நோக்கில், சிறுபான்மையினக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்த வாய்ப்புகளுக்கும் முட்டுக்கட்டைப் போடும் வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்யத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பின் ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்படாத நிலையில், தனியார் கணக்கீடுகளின்படி, சுமார் 79% மக்கள் இந்து மதம், 15% மக்கள் இஸ்லாமிய மதம், மீதமுள்ள 6% மக்கள் கிறித்தவம், பௌத்தம் போன்ற மதத்தினர் இருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு கர்நாடகத்தில் பாஜக ஆட்சி செய்தபோது, அரசியலமைப்பிற்கு எதிரானது என இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அறிவித்தார் அமித் ஷா.

அதனைத் தொடர்ந்து, தற்போது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல சிறுபான்மையினருக்கான கல்விக் கூடங்களின் செயல்பாடுகளைச் சட்டப்பூர்வமாக நீர்த்துப்போக வைக்கும் வழக்கை, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது ஒன்றிய அரசு.

மட்டுமின்றி, கல்வித்துறையில் சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பெறும் குறைந்த அளவு இடஒதுக்கீடுகளுக்கும் தடை விதிக்க முனையும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏறக்குறைய 15% ஆக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு 4% என்பதே குறைவு. இந்நிலையில் அதையும் குறைக்க முற்படும் அரசின் செயல்பாடுகள் மத சார்பற்ற இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாகும்.

சிறுபான்மையினர் கல்வி – வேலைவாய்ப்பிற்கு வேட்டு வைப்பது நல்லதல்ல!

படிக்க வேண்டும்

spot_img