ஒரு மனிதனின் மிக முக்கியமான உரிமைகளில் ஒன்று பேச்சுரிமை, கருத்துரிமை. அதனையே தடுக்கும் விதமாக தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மசோதா ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள், அத்துமீறி அவைக்குள் குதித்து கலர் புகை வீசியவர்களுக்கு அனுமதி கடிதம் அளித்த பா.ஜ.க எம்.பி மீது நடவடிக்கை எடுங்கள் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொத்து கொத்தாக சஸ்பெண்ட் செய்து பா.ஜ.க. அரசு வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது.
இந்நிலையில் தான் கடந்த 138 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஆங்கிலேயர்களின் தொலைத் தொடர்பு சட்டத்தின், சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறார் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை எல்லாம் சஸ்பெண்ட் செய்து எதிர்ப்பே இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது தொலைத் தொடர்பு மசோதா.
தொலைத் தொடர்புத் துறையில், ஊடகங்கள் வெளியீடும் செய்திகள், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்துவதாக இருப்பின், ஒன்றிய அரசு அக் குறிப்பிட்ட ஊடகத்தை முடக்கலாம் என்ற ஷரத்தையும் இணைத்திருக்கிறது.
இது முழுக்க முழுக்க ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இரண்டு நபர்களுக்கு இடையே பகிரப்படும் செய்திகளை தேவைப்பட்டால் தொலைத்தொடர்பு நிறுவனம் அரசுக்கு வழங்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உளவுபார்க்கும் கருவிகளே இல்லாமல் இந்த சட்டத்தின் துணைகொண்டு ஒன்றிய அரசால் ஒருவரை ஒட்டுக்கேட்க முடியும். இதற்கு மாநில அரசுக்கும் உரிமை உண்டு என்று கூறப்பட்டாலும், தொலைத்தொடர்புத் துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அதன் முழுமையான கட்டுப்பாடு ஒன்றிய அரசுக்கே செல்கிறது.
இம்மசோதா மூலம், தொலைத் தொடர்பு சேவைகள், கருவிகள், உள்கட்டமைப்பு, வலைபின்னல் போன்ற அனைத்தும் ஒன்றியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது. இதன் மூலம் கருத்துரிமை துண்டிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் நடக்ககூடிய செய்திகளை, பல்வேறு பகுதியிலிருந்தும், பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் சேகரித்து உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகத்தை கட்டுப்படுத்த நினைப்பது நாட்டின் வெளிப்படைத் தன்மைக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை!



