சென்னையை ஒரு புரட்டு புரட்டிபோட்டு விட்டு போய்விட்டது இந்த மிக்ஜாம் புயல். ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள், நீரில் மூழ்கிவிட்டன. தண்ணீர் புகுந்து ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள் சேதமாகி உள்ளன.
அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் என பாரபட்சமின்றி வெள்ள நீர் புகுந்து நிரம்பியுள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையே கிட்டத்தட்ட ஒரு தீவு போலவே ஆகிவிட்டது.
கான்கிரீட் வீடுகள் நிறைந்த குடியிருப்புகளிலேயே இந்த நிலை என்றால் ஏழைகள் வாழும் குடிசைப்பகுதிகளின் நிலை படுமோசமாக இருந்தது.
குறிப்பாக கூவம் நதிக்கரையோரம் பல்லாயிரம் குடிசைகள் நீரில் மூழ்கின. அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
எப்போதுமே சென்னையை பொறுத்தவரை, தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் புகுந்துவிடும். ஆனால், இந்த முறை, மேடான பகுதிகளிலும் சேர்த்தே மழைநீர் புகுந்துவிட்டது. இதனால், பாதுகாப்பான இடங்களை தேடி செல்லும் நிலைமை ஏற்பட்டது.
இந்த தண்ணீரில் நின்றுகொண்டுதான், பொளந்து கட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தமிழ்நாடு அரசு தீவிரப்பணிகளை மேற்கொண்டது.
முறிந்து விழுந்த மரங்கள் ஒருபக்கம், பலத்த காற்று மறுபக்கம் என கொட்டும் மழைக்கு நடுவில், தமிழ்நாடு அரசின் மீட்புப் பணிகள் பாராட்டத்தக்கவை.
இடைவிடாமல் மழை பெய்து வருவதால், நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது என்றாலும், தமிழக அரசு தொடர்ந்து களப்பணிகளில் நேற்று முன்தினம் முதலே ஈடுபட்டு வருகிறது. சென்னையையும் திரும்ப மீட்டுக் கொண்டிருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பான முறையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறையினர் மற்றும் பல முக்கிய அதிகாரிகளுடன் அவ்வப்போது தொடர்பு நிலையில் இருந்து, செய்யவேண்டிய பணிகள், ஆங்காங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்து, ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தார்; களத்திலே தானும் இறங்கி, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மின்னல் வேகத்தில் செயல்பட வைத்தார்.
47 ஆண்டுகளுக்கு முன்பு பெய்ததுபோல, அடாது பெய்த மழையை தமிழ்நாடு அரசின் அனைத்து துறையினரும் நன்றாக ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றி சமாளித்த விதம் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
வழக்கம் போல எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினாலும் உண்மையைப் பாராட்டத் தானே வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு சல்யூட் அடித்து பாராட்டுவோம்.
ஒவ்வொரு ஆண்டும் புயல் மற்றும் பருவமழை என இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் சென்னை மாநகரம் திணறித்தான் போகிறது. எனவே எந்த புயல் வந்தாலும் தண்ணீரே தேங்காத வகையில் என்ன தொழில்நுட்பத்தை புகுத்தலாம் என்பதை ஆராய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இதைப்பற்றியும் சிந்தித்து இன்னும் என்ன செய்யலாம் என்பதை கண்டறிந்து செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!



