fbpx
Homeதலையங்கம்இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வரட்டும்!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வரட்டும்!

கடந்த மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீ ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவியதில் 1,400 பேரை கொல்லப்பட்டனர். ஏராளமான பொதுமக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. 49வது நாளாக தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள்.

ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து ஐநா பொது சபையில் ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இதை இஸ்ரேல் கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில் அதை மதிக்காமல் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்தது.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளின் முயற்சியால், 48 நாள் போருக்குப் பிறகு, இஸ்ரேல்- ஹமாஸ் படைகள் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்பு கொண்டன.

இதன்படி, சிறைபிடித்துள்ள 240 பணயக் கைதிகளில் 50 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் படை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இரு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள் முதலில் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக, கடந்த வெள்ளிக்கிழமை 14 இஸ்ரேல், 10 தாய்லாந்து என மொத்தம் 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. பதிலுக்கு இஸ்ரேலும் சிறையில் வைத்திருந்த 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது.

2வது கட்டமாக சனிக்கிழமை 13 இஸ்ரேல், 4 தாய்லாந்து உள்பட 17 பேரும், 3வது கட்டமாக நேற்று முன்தினம் 14 இஸ்ரேல், 3 தாய்லாந்து என 17 பேர் ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலும் 2வது மற்றும் 3வது கட்டங்களில் தலா 39 பாலஸ்தீனர்களை விடுவித்தது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கடைசி நாளான நேற்றுடன் போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா அல்லது நீட்டிக்கப்படுமா என்று உலக நாடுகள் எதிர் நோக்கிய நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 2 முதல் 4 நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் படை விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் பல பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போரில் அதிகளவில் குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிணை கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்ப வேண்டும் என்றே உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

போர் நிறுத்தம், இரு தரப்பு பணயக் கைதிகள் விடுதலை… இதெல்லாம் போர் முடிவிற்கு வருவதற்கான முன்னோட்டமாக இருக்கட்டும்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img